Skip to main content

பகலில் சாமியார்; இரவில் திருடன்! சேலத்தில் பலே ஆசாமி கைது!

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

preacher by day; Thief in the night! Bale Asami arrested in Salem!

சேலத்தில், பகல் நேரத்தில் காவி உடையில் சாமியார் வேடமிட்டு வீடுகளை நோட்டமிட்டு வரும் வாலிபர், இரவு நேரங்களில் வீடுகளில் திருட்டை அரங்கேற்றி வந்திருக்கும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

சேலத்தை அடுத்துள்ள மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 62). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவருடைய மனைவி ராஜாமணி. கணவன், மனைவி இருவரும் ஜூலை 2- ஆம் தேதி காலை, தங்கள் வீட்டை பூட்டி விட்டு, பழனி முருகன் கோயிலுக்கு சென்று விட்டனர். 

 

கோயிலில் இருந்து மறுநாள் அதிகாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பதற்றம் அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோக்களில் வைக்கப்பட்டு இருந்த 40 பவுன் நகைகள், 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டது தெரிய வந்தது. இதைக்கண்டு தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர். 

 

இதுகுறித்து சின்னசாமி காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் (பொறுப்பு) உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த விரல்ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் உதவியுடன் திருடர்களை தேடி வந்தனர். 

 

இதற்கென தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார். சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். தீவிர விசாரணையில், சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 33), பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த அமீர்ஜான் (வயது 34), செல்வராஜ் என்கிற சாகுல் ஹமீத் (வயது 53) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 

preacher by day; Thief in the night! Bale Asami arrested in Salem!

இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள், 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்டுள்ள மூவரில் ஒருவரான மணிகண்டன் என்பவர்தான் இந்த சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டு வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 

இவர் மீது ஏற்கனவே சேலம் மாநகர காவல்துறையில் 2 கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. நாமக்கல், ஈரோடு, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மணிகண்டன் மீது திருட்டு வழக்குகள் உள்ளிட்ட 30 வழக்குகள் விசாரணையில் உள்ளன. மணிகண்டனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்தன. 

 

மணிகண்டனை குற்ற வழக்குகள் தொடர்பாக பல்வேறு மாவட்ட காவல்துறையினர் நீண்ட காலமாக வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களுக்கு போக்குக் காட்டுவதற்காக பகல் நேரங்களில் காவி வேட்டி அணிந்து கொண்டும், கழுத்தில் நான்கைந்து ருத்ராட்ச மாலைகள், நெற்றியில் பட்டையாக விபூதி, திருநீறு அணிந்து கொண்டும், கையில் பல்வேறு நிறங்களில் மந்திரித்த கயிறுகளைக் கொண்டும் சாமியார் வேடமிட்டு சுற்றி வந்திருப்பது தெரிய வந்தது. தனக்கு பணத்தேவை ஏற்படும்போது, இரவு நேரங்களில் வீடுகளில் திருடி வந்துள்ளார்.

 

சேலத்தை அடுத்த அயோத்தியாபட்டணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததும், அங்கு தனது காதலியை வரவழைத்து  அவருடன் நெருக்கமாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. சாமியார் வேடம் போட்டிருந்ததால், அவர் மீது யாருக்கும் எளிதில் சந்தேகம் வராததோடு, நல்ல அபிமானத்தையும் கொடுத்துள்ளது. அதேநேரம், எந்தெந்த வீடுகள் நீண்ட நாள்களாக பூட்டிக் கிடக்கிறது?, வயதானவர்கள் வசிக்கும் வீடுகள் குறித்தெல்லாம் நோட்டமிட்டு வரவும் சாமியார் வேடம் பெரிதும் உதவியிருக்கிறது. 

 

நீண்ட நாள்களாக பூட்டி இருக்கும் வீடுகள், முதியோர் வசிக்கும் வீடுகளாக பார்த்து அவர் தனது கூட்டாளிகளுடன் இரவு நேரத்தில் சென்று திருடி வந்துள்ளார். திருடிய பணம், நகைகளைக் கொண்டு அவர் பெண்களுடன் தனிமையில்  இருந்துள்ளார். பிடிபட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாலியல் தொந்தரவு; பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Brajwal Revanna suraj revanna brother arrested

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணாவை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி. ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலை வாங்கித்தருவது தொடர்பாக அவரை அணுகிய போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஊழியர் அளித்த புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சூரஜ் ரேவண்ணாவின் சகோதரர் பிரஜ்வல் பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவரது தந்தை ரேவண்ணா பெண் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரஜ் ரேவண்ணாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377, 342, 506 இன் கீழ் ஹோலேநரசிபுரா காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரஜ் ரேவண்ணா கடந்த 16 ஆம் தேதி (16.06.2024) ஹாசன் மாவட்டத்தில் உள்ள கன்னிகடா கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் வைத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார்தாரர் கூறியுள்ளார். இந்த கைது சம்பவம் தொடர்பாக ஹாசன் மாவட்ட போலீஸ் எஸ்.பி. முகமது சுஜிதா கூறுகையில், "மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமேலவை உறுப்பினரும். எச்.டி ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்" என தெரிவித்துள்ளார். 

Next Story

கள்ளக்குறிச்சி சம்பவம்; பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Forgery incident The toll rises further

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே கள்ளச்சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் ராமர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதே சமயம் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கச்சிராபாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர். 

Forgery incident The toll rises further

இத்தகைய சூழலில் கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியான மாதேஷ் நண்பர்களான பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சக்திவேல், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மீன் வியாபாரி கண்னன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில் மாதேஷுக்கு மெத்தனால் கடத்த உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதன் என்பவர் உயிரிழந்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.