Skip to main content

பித்தலாட்ட கதைகள் கூறி பெண்ணின் தாலியை பறித்த சாமியார்... 

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

Preacher arrested for stealing gold

 

"உனது கணவரின் ஆத்மா சாந்தியடையவில்லை. உடனடியாக அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்." என பித்தலாட்ட கதைகள் கூறி விதவைப் பெண்ணிடம் தங்கத் தாலி மற்றும் பணம் பறித்த கிளுகிளு சாமியாரை கைது செய்துள்ளனர் விளாத்திக்குளம் துணைச்சரகப் போலீசார்.

 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் துணைச்சரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் கணேசனின் மகனான சக்தி. இவர், விளாத்திக்குளம் டு நாகலாபுரம் செல்லும் வழியில் 'சக்தி வராகி' எனும் பெயரில் ஜோதிட நிலையம் ஒன்றை அமைத்துக்கொண்டு, மாந்தீரீக குறி கூறிவந்துள்ளார். அவ்வப்போது உலக நன்மைக்காக எனும் பெயரில் அண்டா பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைத்து, அதில் கோடுகளை வரைந்து தியானத்தில் இருப்பதாக காண்பித்து விளம்பரம் செய்துவந்ததால், மக்கள் மத்தியில் மிகப்பிரபலமான சாமியார் ஆனார். இதனையே தனது தொழிலுக்கான மூலதனமாக்கி "பிரிந்தவர்கள் சேர வேண்டுமா..? வேலை கிடைக்கவில்லையா.? பொருளாதார பிரச்சனையா.?" என மக்களின் அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி 'குறி' கூறி முகநூல் பக்கத்தில் நேரலை செய்து, பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். இதனிடையே, "உனது கணவர் உன்னுடன் இருக்கவில்லையா..?"  என பெண்கள் வட்டத்திலும் பேசி நெருக்கமானது குறிப்பிடத்தக்கது.

 

Preacher arrested for stealing gold

 

இது இப்படியிருக்க, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண்மணி ஒருவர் “தொட்டது துலங்கவில்லை.! மனசே சரியில்லை!" என இவரிடம் 'குறி' கேட்க, வழக்கமான பித்தலாட்ட வேலைகளை ஆரம்பித்த சாமியார், "இறந்த உனது கணவனின் ஆத்மா சாந்தியடையவில்லை. இப்போது நீ குடியிருக்கும் வீட்டை இடித்து மாற்றியமைத்தால்தான் உன் கணவர் ஆத்மா சாந்தியடையும், உனது குடும்பப் பிரச்சனை தீரும்" என்று கூற, அந்த பெண்ணோ, "தன்னிடம் பணம் இல்லை" என்று கூற, அந்தப் பெண்ணிடமிருந்து 2½ பவுன் தங்கச் செயினைப் பெற்றுக்கொண்டு, ரூபாய் 30,000 கொடுத்து சாமியாரே,  வீட்டை இடித்து வாஸ்து படி (.?) கட்டியிருக்கிறார். இதற்கடுத்த மாதங்களில், "குடும்ப பிரச்சனை தீரவில்லை" என மீண்டும் அந்தப் பெண் அழுது புலம்ப, "உனது தங்கத் தாலி, தங்க மோதிரம் இவற்றை உருக்கிக் கொண்டு வா.! அதனை தாயத்தாக மாற்றி உனக்கு தருகின்றேன். அதற்குக் கட்டணம் 3,000 ரூபாய் எனக் கூற, அதனையும் செய்திருக்கிறார் அந்தப் பெண்மணி. அப்போதும் பிரச்சனை தீரவில்லை என்பதால், தான் ஏமாந்ததை அறிந்தவர் "நான் கொடுத்த தாலி, மோதிரம் பணத்தைக் கொடு.!" என சாமியாரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், "மரியாதையாக ஓடிவிடு.! இல்லையெனில் கால், கை விளங்காமல் செய்துவிடுவேன்" என மிரட்டிய நிலையில் விளாத்திக்குளம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் அந்தப் பெண்மணி.

 

புகார் குறித்து அறிந்த தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விளாத்திக்குளம் டி.எஸ்.பி. பிரகாஷ் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் விளாத்திக்குளம் டி.எஸ்.பி. மேற்பார்வையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சாமியார் சக்தியை கைது செய்தனர். மேலும், இதுபோன்று எத்தனை பேரை மோசடி செய்துள்ளார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையில், இதுபோன்று போலி சாமியார்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

படங்கள்: விவேக்

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.