Skip to main content

ஷூட்டிங் ஸ்பாட்டான அரசு மருத்துவமனை; ஆபரேஷன் தியேட்டரில் வெட்டிங் ஷூட்!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
pre Wedding shoot in operation theater in government hospital in Karnataka

அரசு மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டரில் ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய ஜோடியினால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அபிஷேக் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவராகப் பணிக்குச் சேர்ந்து பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தனது திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டை மிகவும் வித்தியாசமாக எடுக்கத் திட்டமிட்ட மருத்துவர் அபிஷேக், அவர் பணியாற்றும் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டில் இல்லாத ஆப்ரேஷன் தியேட்டரில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் நோயாளி ஒருவர் படுத்திருக்கும்படியும், அவருக்கு அபிஷேக் மருத்துவம் பார்க்கும்படியும் உள்ளது. கூடவே அவரைத் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணும் இருந்துள்ளார். 

இந்த போட்டோ ஷூட் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்கும் இடத்தில் அபிஷேக் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, அவரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.