Advertisment

இளையராஜாவை அனுமதிக்க நிபந்தனைகள் விதித்த பிரசாத் ஸ்டூடியோ!

Prasad Studio imposed conditions to allow Ilayaraja!

இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில், 1976-ஆம் ஆண்டு முதல் தனது படங்களுக்கு இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

Advertisment

இந்தநிலையில், பிரசாத் ஸ்டூடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டூடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இடத்தைக் காலி செய்வது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு, சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Advertisment

இந்நிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள, தானே எழுதிய இசைக் கோர்ப்புகள், தனக்குச் சொந்தமான இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, கடந்த முறை நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 40 ஆண்டுகளாக, தான் பயன்படுத்தி வந்த இடத்தில், இளையராஜாவை ஒரு நாள் அனுமதிக்க முடியுமா எனபதிலளிக்க, பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பொருட்களை எடுத்துக்கொள்ள இளையராஜாவை அனுமதித்தால் ரசிகர்கள் அதிகளவில் கூடிவிடுவார்கள் என்பதால், அவரை அனுமதிக்க முடியாது என்றும், அவரது பிரதிநிதிகள் வந்து பொருட்களை எடுத்துச்செலலாம் எனவும் பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதி, பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள், இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் செல்லலாம் என யோசனை தெரிவித்ததுடன், இதுகுறித்து இரு தரப்பும் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு அனுமதிக்கும்பட்சத்தில், இழப்பீடு கோரிக்கையை வலியுறுத்த வேண்டாமென இளையராஜாவிற்கு அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜாவை, நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் நுழைய அனுமதிக்கத் தயார் என, ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

cnc

அதன்படி, ‘மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் 50 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு, தங்களுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; ஸ்டூடியோவில் இசையமைத்த நிலத்தை உரிமை கோரக் கூடாது; ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர், வழக்கறிஞர் ஆகியோருடன் மட்டுமே இளையராஜாவை அனுமதிக்க முடியும். மேலும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஸ்டூடியோவுக்கு தகுந்த காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும். இளையராஜா வந்துசெல்லும் நாள் குறித்து இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசித்து முடிவு செய்துகொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக, தனது பெயரில் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் பிரமாண மனுத் தாக்கல் செய்யவேண்டும்’ என பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரசாத் ஸ்டூடியோவின் மேற்கண்ட நிபந்தனைகளை ஏற்று, இன்று மாலை உயர்நீதிமன்றத்தில் பிரமாண மனுத் தாக்கல் செய்வதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு (23.12.2020) தள்ளிவைக்கப்பட்டது.

ilayaraja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe