Skip to main content

“பிரதீபாவின் இழப்பு பெரும் பாதிப்பை எனக்குள் ஏற்படுத்தியது” - துரை வைகோ வேதனை!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Pradeepa's loss affected me a lot

 

திருச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாணவா் அணியின் தலைமையில் 27.11.2021 அன்று நடைபெற்ற நீட் எதிர்ப்பு கருத்தரங்கத்தை மதிமுகவின் தலைமை கழகச் செயலாளரான துரை வைகோ கலந்துகொண்டு துவங்கிவைத்தார். முதலில் இந்தக் கருத்தரங்கத்தில் தன்னுடைய கருத்தைப் பதிவுசெய்த அரசியல் ஆய்வு மையச் செயலாளா் ஈழவாளேந்தி செந்திலதிபன் பேசுகையில், மதிமுகவின் தந்தையான வைகோ தன்னுடைய வாழ்வில் இந்த மக்களுக்காகவும், தமிழகத்திற்காகவும் எப்படிப்பட்ட தியாகங்களை செய்துள்ளார். இன்றுவரை அவருடைய அயராத உழைப்பை பற்றி பேசிவிட்டு அமர்ந்தார். அதன் பிறகு, கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு தன்னுடைய கருத்துரைகளை முன்வைத்தார். அதில், “2013இல் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி 2010இல் இந்த மருத்துவ கவுன்சில நீட் தேர்விற்கான வரைமுறைகள், சட்டதிட்டங்களை அறிவிக்கிறார்கள்.

 

நீட் தேர்வு வேண்டாம் என்று அன்றைய பிரதமருக்கு குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் குஜராத் வாரியத்தால் நடத்தப்படும் தேர்வின் மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல், நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கருத்தில்கொண்டு மருத்துவ மாணவா் சோ்க்கை நடந்தால், அது குஜராத் மாநிலத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியா முழுவதும் நீட் தேர்விற்கு மாணவா்கள், கல்வியாளா்கள், பேராசிரியா்கள் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனா். ஆனால், இந்தியாவிலேயே தமிழகத்தின் எதிர்ப்பு மட்டுமே பெரிய அளவில் முன்வைக்கப்பட்டு, பேசப்பட்டுவருகிறது. அதற்குக் காரணம், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அந்த மாநில மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளும் அரசு அமையவில்லை.

 

Pradeepa's loss affected me a lot

 

ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் மக்களின் உணா்வுக்கு மதிப்புகொடுத்து அதைப் புரிந்துகொள்ளும் அரசு உள்ளது. இந்த அரசின் குரல் என்பது தமிழ்நாட்டிற்கானது மட்டும் அல்ல, நீட் தேர்வை ஏற்காத அத்தனை மாநிலங்களின் ஒட்டுமொத்த குரல். அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இந்தியா முழுக்கச் சென்றது ஒரு கைத்தடி, அது பெரியாரின் கைத்தடி. முதல் நாடாளுமன்ற அரசமைப்பு திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர வரைவு குழுவின் தலைவர் அம்பேத்கர் அவையில் இருக்கிறார் அன்றைய பிரதமா் ஜவஹர்லால் நேரு. அந்த முதல் சட்டத்திருத்தத்தை அமல்படுத்துமாறு கூறுகிறார். 1949இல் நடைபெறும் இந்த நிகழ்வில், கூட்டாட்சி தத்துவத்தைக் குறித்து டாக்டா் அம்பேத்கர் போதுமான அளவிற்கு விளக்கம் தருகிறார். மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளும், கல்வி, மருத்துவம் என்று அனைத்தும் மாநில அரசிற்கு உட்பட்டதுதான். எனவே மாநில அரசினுடைய சட்டத்தை ஒன்றிய அரசுகள் நினைத்தால் எடுத்துக்கொள்ள முடியாது என்றும், ஏன் நீதிமன்றங்களே அதைச் செய்ய முடியாது என்று கூறகிறார்.

 

அரசியலமைப்பு சட்டத்தில் போடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவிற்கும் அந்தப் பிரிவிற்கான காரணங்கள் குறித்து முதலில் விளக்கம் அறிந்துகொள்ள வேண்டும். சட்டப்பிரிவுகள் போடப்பட்டுள்ள கால்புள்ளி, அரைப்புள்ளி, முழு புள்ளி என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதைத்தான் இந்த கூட்டாட்சி தத்துவத்தில் அம்பேத்கர் எடுத்துக் கூறினார். கடந்த 2012இல் கல்விபெறுவதற்கான உரிமை சட்டத்தில் சட்டப்பிரிவு 21ஏ என்பதில் For என்ற ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரிவு 45இல் 'to' என்ற ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வர்க்கம் இருக்கிறது என்று காரல் மார்க்ஸ் கூறுகிறார். ஆனால் பாஜகவின் தமிழக தலைவர், முன்னால் காவல்துறை அதிகாரி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்று கூறுகிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்று எந்த சட்டம் சொல்கிறது என்று கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தின் பணி நாடாளுமன்றத்திற்கு எதிராக எந்த ஒரு சக்கரமும் செயல்படாமல் பாதுகாப்பதே தவிர, நீதிமன்றம் நாடாளுமன்றம் போல சட்டம் இயற்றுவதற்கு அல்ல. 

 

எனவே இந்த நீட் விவகாரத்தில் மாநில அரசால் ஒரு சட்டம் இயற்ற மாநில அரசிற்கு உரிமை உண்டு. எனவே மாநில அரசானது தற்போது உள்ள 230 சட்டமன்ற உறுப்பினா்களையும் அழைத்து கவர்னா் மாளிகையில், தமிழக முதலமைச்சர் தலைமையில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். தமிழக ஆளுநா் இதுவரை நீட் குறித்த பதிலைத் தராமல் மவுனம் காப்பது பல்லாயிரக்கணக்கான மாணவா்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருகிறது. எனவே நீட் விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பு கொண்டுவந்த சட்டத்தின் கீழ் அது செல்லும். எனவே மாநில அரசு முடிவெடுக்க முடியும் என்றும், கவா்னரை சந்தித்து விரைவில் பதிலைப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

Pradeepa's loss affected me a lot

 

அவரை தொடர்ந்து பேசினார் மதிமுக தலைமைச் செயலாளரான துரை வைகோ. தன்னுடைய முதல் அரசியல் பேச்சு, அதிலும் நீட் தேர்வுக்கு எதிராக கருத்தரங்கில் முதல்முறையாக திருச்சியில் பேசிய பெருமை அவருக்கு உண்டு. அப்போது அவர் கூறியதாவது, “மாணவா்கள் அணி நடத்திய இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன். ஆதவன் இல்லை, ஒளி இல்லை; பாவமன்னிப்பு இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை; மனிதநேயம் இல்லாமல் இஸ்லாம் இல்லை; ஆன்மீகம் அறநெறி இல்லாமல் இந்துமதம் இல்லை; ராமர் இல்லாமல் ராமாயணம் இல்லை; தர்மர் இல்லாமல் மஹாபாரதம் இல்லை; சேகுவாரா இல்லாமல் புரட்சியின் அடையாளம் இல்லை; ஃபிடல் கேஸ்ட்ரோ இல்லாமல் கியூபாவின் புரட்சி இல்லை; பிரபாகரன் இல்லாமல் தமிழீழ விடுதலை வரலாறு இல்லை; பெரியார் இல்லாமல் சமூகநீதி இல்லை; இயக்க தந்தை வைகோ இல்லாமல் மதிமுக இல்லை, அந்த இயக்க தந்தைக்காக 28 வருடங்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ரத்தநாளங்களாகிய தொண்டா்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.

 

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தன்னுடைய வாழ்த்துகளை எழுத்து மூலம் தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அரியலூரைச் சோ்ந்த மாணவி அனிதா, விழுப்புரம் பிரதீபா என்று மொத்தம் 17 மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளனர். அதில் 12 பேர் மாணவிகள். இந்தக் கூட்டத்தின் நோக்கமே 17 பேரின் உயிரிழப்பைப் போல இனிவரும் காலங்களில் நடந்துவிடக் கூடாது என்பதுதான். அதிலும் 17 மாணவா்கள் நன்றாகப் படிக்கக் கூடியவா்கள், நீட் பயிற்சி எடுத்துக்கொண்டவா்கள். ஆனால் அதில் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவியின் இழப்பு பெரும் பாதிப்பை எனக்குள் ஏற்படுத்தியது. ஆதிதிராவிடா் வகுப்பைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் ஆடுமாடு மேய்ப்பவா்கள், ஏழை வீட்டைச் சேர்ந்த மாணவி, பெரவலூர் அரசுப் பள்ளியில் படிக்கும் பிரதீபா 10ஆம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு 490 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெறுகிறார்.

 

அதைப் பார்த்துவிட்டு மாவட்ட ஆட்சியா் அவரை ஊக்குவித்து பாராட்ட, தனியார் பள்ளியில் சோ்த்துவிடுகிறார். 12ஆம் வகுப்பில் 1125 மதிப்பெண் பெறுகிறார். ஆனால் அன்று அரசு மருத்துவக் கல்லுரியில் இடம் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தாலும், பொருளாதார பின்னடைவால் கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை. மீண்டும் அடுத்த வருடம் 2017இல் நீட் தேர்வு வந்துவிடுகிறது. நீட் தேர்வு எழுதி 157 மதிப்பெண் பெறுகிறார். அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. மீண்டும் தனியார் கல்லூரியில் சுயநிதி பிரிவில் கிடைக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பை விட்டுவிடுகிறார். மீண்டும் அடுத்த வருடம் எழுதிக்கொள்ளலாம் என்று தங்களிடம் இருந்த நகைகளை, சேமிப்புகளை வைத்து நீட் பயிற்சி மையத்திற்குச் செல்கிறார்.

 

பயிற்சி மையத்தில் சோ்ந்து பயின்று நீட் தேர்வை எழுதுகிறார். 2018இல் மீண்டும் நீட் தேர்வு எழுதி வெறும் 39 மதிப்பெண் வாங்குகிறார். அரசுப் பள்ளியில் பயின்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவா், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விஷ மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். கடந்த சில வருடங்களாக ஒரு தவறான பிரச்சாரத்தை செய்கிறார்கள். நீட் தேர்வு வந்ததால் ஏழை, எளியவர்கள் மருத்துவா்கள் ஆக வாய்ப்பு கிடைப்பதாக கூறுகிறார்கள். 3 வருடமாக எழுதியும் அரசு கல்லூரிக்குப் போக முடியவில்லை. முன்பெல்லாம் மருத்துவ சீட்டுக்கு 50 லட்சம் முதல் 1 கோடிவரை விலைபோகும், தற்போது விலை குறைந்துவிட்டது என்று கூறுகின்றனா். அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தால் வருடத்திற்கு டியூசன் கட்டணம் 13 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே, தனியார் கல்லூரியில் சுயநிதி பிரிவில் மெரிட்டில் வந்தவா்களுக்கு 3 முதல் 4 லட்சம் வரை டியூசன் கட்டணம், மேனேஜ்மென்ட் பிரிவில் 12 லட்சம் டியூசன் கட்டணம், நீட் வந்ததால்தான் இப்படி கட்டணம் குறைந்துள்ளது என்று கூறுகின்றனா்.

 

நீட் வந்த பிறகு குறைக்கப்பட்ட இந்தக் கட்டணம், நீட் தேர்வைக் கொண்டு வராமலேயே இந்த மருத்துவப் படிப்பு கட்டணத்தைக் குறைத்திருக்கலாம். ஆனால் இவை கொண்டுவந்ததின் நோக்கம், ஏதோ ஒரு ஏஜென்சி லாபம் சம்பாதிப்பதற்காக அரசின் கல்வியைக் குறை சொல்வதாக இருக்கிறது. இதில் லாபம் அடைவது நீட் பயிற்சி எடுக்கும் தனியார் நிறுவனங்கள் மட்டுமே. எனவே இந்த நீட் தேர்வால் இனி ஒரு உயிர்கூட போகாத அளவிற்கு நாம் நம்முடைய பயணத்தை இந்த திருச்சியில் துவங்க வேண்டும். எனவே நாம் நீட் தேர்விற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து, அதனால் பலருடைய வாழ்க்கையைக் காப்பாற்ற உறுதியேற்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.