வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடை இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இதன் காரணமாகச் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று(15.10.2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஐடி நிறுவன ஊழியர்கள் வரும் 18ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே பணி செய்யம்மாறு என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், தனியார் வானிலை ஆர்வலர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், “அடுத்த 3 மணி நேரத்திற்கு அதிக மழை பெய்ய உள்ளதால் அலுவலகத்திற்கு வந்தவர்கள் சீக்கிரம் வீட்டிற்கு செல்லுங்கள். நாளை இன்னும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று இரவு முதல் சில இடங்களில் 200 மி.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.