ADVERTISEMENT

இறந்த பிறகு வாழப் போகிறார்! எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்!

04:39 PM Dec 21, 2018 | rajavel



இறந்த பிறகு வாழப் போகிறார் என எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ADVERTISEMENT

எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழுக்கென்றே தன்னைத் தாயாரித்துக்கொண்டவர். எழுத்தெண்ணித் தமிழ்படித்துக் கரந்தைக் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர். புலவர் பட்டம் என்ற வட்டம் பலபேரால் தாண்டவியலாதது. அதைத்தாண்டி நவீன இலக்கியத்திற்காகத் தன்னை வார்த்துக்கொண்டவர். நா.பார்த்தசாரதிக்குப் பிறகு பண்டித மரபு தாண்டிப் படைப்பிலக்கியத்திற்கு வந்தவர் பிரபஞ்சன். கள்ளுக்கடை வைத்திருந்த தந்தைக்குப் பிறந்தவர் கவிதைக்கடை வைத்ததுதான் இலக்கிய ஆச்சரியம்.

சமரசம் இல்லாத படைப்பாளி அவர். மானுட யாத்திரையைத் தடுக்கும் பிற்போக்குக் கோடுகள் அகற்றப்பட வேண்டும் அல்லது அகலப்படுத்தப்பட வேண்டும் என்பது பிரபஞ்சனின் இலக்கியக் கொள்கை. இருள்கட்டிக் கிடக்கும் மனித மனங்களுக்குள் மெல்லிய மெழுகுவத்தியை ஏற்றிவைத்தை எழுத்து பிரபஞ்சன் எழுத்து. அவரது வானம் வசப்படும் என்ற நாவலும், நேற்று மனிதர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பும், முட்டை என்ற நாடகமும் நீண்ட காலங்கள் நினைவிலிருக்கும்.

இருக்கும்போது செத்துச் செத்து இறந்தபின் வாழ்கிறவன்தான் எழுத்தாளன். உடலென்ற கூடு உடைந்தபிறகும் என் எழுத்தில் நான் உயிரோடிருப்பேன் என்ற சின்னத்தனமான ஒரு கர்வம்தான் எழுத்தாளனை எழுதவைக்கிறது. அதே நம்பிக்கையில் 73 வயது வரையில் இயங்கி வந்த பிரபஞ்சன் இதோ இப்போது இறந்துவிட்டார்; அவரது எழுத்து வாழப்போகிறது.

மறதி அதிகமிக்க மகாயுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் எழுத்தாளனையாவது நீண்ட காலம் நெஞ்சில் நிறுத்துவோம். அவரை இழந்து வாடும் உறவுகளுக்கும் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT