Advertisment

கொள்முதல் நிலையங்களை மூடிய மத்திய அரசுக்கு பி.ஆர். பாண்டியன் கண்டனம்..! 

P.R. Pandiyan condemn  for closing the purchasing stations

Advertisment

மத்திய அரசு பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நெல் கொள்முதல் செய்வதை கைவிட்டு மத்திய அரசின் உணவுக் கிடங்குகளை மூடிவிட்டது. இதனை எதிர்த்து அம்மாநில விவசாயிகள் கிடங்குகள் முற்றுகைப் போராட்டத்தை நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியா முழுவதிலும் ஆதரவு கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் மாநில விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை அடையாளப்படுத்தும் வகையில் தமிழகம் தழுவிய அளவில் மன்னார்குடி அருகே இருக்கிற பாமணி மத்திய தானியக் கிடங்கை முற்றுகையிடுவதற்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் நேற்று மன்னார்குடி பந்தலடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனை ஏற்க மறுத்த விவசாயிகள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது.. பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; “விவசாயிகளுக்கு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் 3 வேளாண் விரோத சட்டங்களை உலகப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டுவந்து விவசாயிகளை பெரு முதலாளிகளிடம் அடிமைப்படுத்திவிட்டது. கடந்த ஒரு வாரகாலமாக பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் ரபி பருவ அறுவடை தீவிரமடைந்து உள்ளது. மதிய உணவு கழகம் தனது கொள்முதலை நிறுத்தி, கொள்முதல் நிலையங்களை மூடிவிட்டது. தனியாரிடம் விற்றுக் கொள்ளுங்கள் என்று தட்டிக் கழிக்கிறது. இதன் மூலம் மத்திய அரசினுடைய துரோகம் வெளிப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறது. எனவே இந்த சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் அந்நிய முதலாளிகளிடம் அடிமைப்பட்டு போவார்கள், போராடும் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு திசை திருப்ப முயற்சிக்கிறது. இதற்கு அதிமுக கட்சியும் ஆட்சியும் முழு துணை போகிறது.

Advertisment

இந்நிலையில் தற்போது மோடி அரசு கொள்முதலை கைவிட்டதன் மூலம் மத்திய அரசின் துரோகம் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறது. எனவே வேளாண் விரோத சட்டங்களை விவசாயிகள் மீது திணிக்க முயற்சிக்கும் பாஜகவையும் அதற்குத் துணைபோகும் அதிமுகவுக்கும் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

எதிர்காலத்தில் தமிழகத்திலும் மத்திய அரசு கொள்முதலை கைவிடும் நிலை ஏற்பட்டு இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. எனவே தமிழக விவசாயிகள் ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் வாக்குகள் மூலமாக மோடி அரசுக்கும் எடப்பாடி அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் விவசாயிகள் வாக்களிக்க முன்வர வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். சட்டத்தை திரும்பப் பெறும் வரையிலும் விவசாயிகள் போராட்டம் ஓயாது என எச்சரிக்கிறேன்” என்றார்.

p r pandian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe