Skip to main content

உட்சபட்சமாகும் அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் மோதல்!!!

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணுவிற்கும், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் அரசியல்வாதிகளையே மிஞ்சியிருக்கிறது.


 

ayyakannu pr pandian


தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார் அய்யாக்கண்ணு. அவர் விவசாயிகளுக்கான பிரச்சினைகளுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். அவர் நடத்திய போராட்டங்களில் உச்சபட்சமான போராட்டமாக அமைந்தது டெல்லி போராட்டம். அரைநிர்வாண போராட்டம், தரையில் உருண்டு போராட்டம், மனித மண்டையோடு போராட்டம், எலி கறி தின்னும் போராட்டம், மனித மலம் திண்ணும் போராட்டம்  என மாதக்கணக்கில் போய்க்கொண்டிருந்த நிலையில் இறுதிக்கட்டமாக நிர்வாணமாக நடத்திய போராட்டம் பல சர்ச்சைகளை கிளப்பியது.
 

அந்தப் போராட்டத்தின் மூலம் உலகத்தையே திரும்பி பார்க்கவும் வைத்தார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் சில சர்ச்சைகளை கிளப்பினாலும், பல இடங்களில் வரவேற்பையும் பெற்றது. இளைஞர்களும், பொதுமக்களும், விவசாயிகளும் அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இவ்வளவு பெரிய போராட்டங்கள் நடந்தும் பாஜக பிரதிநிதிகளோ, பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ விவசாயிகளை சந்திக்கவில்லை என்கிற கோபம் தமிழக விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் எழுந்தது.
 

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மோடியை எதிர்த்து அவர் நிற்கும் தொகுதியில் போட்டியிடப் போவதாக அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார். இந்த சூழலில் யாரை எதிர்த்துப் போராடினாரோ, யாரை எதிர்த்து போட்டியிட சென்றாரோ அவரையே டெல்லியில் சந்தித்து தமிழக விவசாயிகளின் எரிச்சலை சம்பாதித்தார். பாஜக அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தவர், "எங்களுக்குள் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது, அவர்களின் பேச்சு எங்களுக்கு மனநிறைவை தருகிறது" என்று பேட்டியும் அளித்தார்.
 

ayyakannu pr pandian


அதன்பிறகு அவருக்கு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்திகள் வந்தபடியே இருந்தது, சிக்கல் மேல் சிக்கல் ஆரம்பமானது. சமூக வலைதளங்களில் அவரது படங்களை போட்டு வைரலாக்கி கிண்டலடித்து வருகின்றனர். பல தரப்பினரும் அவருக்கு எதிராகக் குரல் எழுப்பி கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
 

இந்த நிலையில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணுவை வெளிப்படையாகவே எதிர்த்து கருத்துக்கூறி வந்தார். அதில் "தமிழர்களின் மானத்தை அய்யாக்கண்ணு பாரதிய ஜனதா கட்சியிடம் அடகு வைத்துவிட்டார், அவருக்கு பெரிய அளவில் செட்டில் ஆகிவிட்டது, அவரின் இந்த செயல் தமிழகத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் செய்யும் துரோகம்," என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகவே பேசிவருகிறார்.
 

ஒருவார காலமாக பொறுமைகாத்த அய்யாக்கண்ணு தற்போது வெகுண்டெழுந்து ,"பாண்டியன் தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவது ஏற்புடையதாக இல்லை, அவர் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடுப்பேன்," என கண்டனம் தெரிவித்துள்ளதோடு,  பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் அளித்தார்.
 

ayyakannu pr pandian


அதில் "தன்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகிறார் பாண்டியன். நான் சூட்கேஸ் வாங்கிவிட்டதாகவும், பாஜகவுடன் சமரசத்திற்கு சென்றுவிட்டதாகவும், விவசாயிகளை பாஜகவிடம் அடமானம் வைத்து விட்டதாகவும், ஆதாரமில்லாமல் அவதூறான செய்திகளை பரப்பி வருகிறார். என்னைப்பற்றி இனி பேசினால் அவரைப் பற்றிய பல தகவல்களை நான் வெளியிட நேரிடும். இதையே கடைசியாக வைத்துக்கொள்ளவேண்டும். என்னைப்பற்றி பேசியதற்கு மான நஷ்ட வழக்குத் தொடரப் போகிறேன். அதோடு மட்டுமல்லாமல் அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை டிஜிபியை சந்தித்து புகார் மனு கொடுக்கப் போகிறேன்." என்று கூறியிருக்கிறார்.
 

இது விவசாயிகள் மட்டத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. ஏற்கனவே அய்யாக்கண்ணு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது, பி. ஆர். பாண்டியன் நக்கலடித்து பேட்டி அளித்தார். பிறகு கமல்ஹாசனை பி.ஆர். பாண்டியன் சந்தித்ததும்ம் அய்யாகண்ணு அதற்கு பதிலடி கொடுக்கும்படியாக நக்கல் அடித்தார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் வசைபாடி வருவது வழக்கமாகவே இருந்தது. இந்த நிலையில் அய்யாக்கண்ணு, அமித்ஷாவை சந்தித்திருப்பது தமிழகத்தையை பேசவைத்துள்ளது. இருவரை பற்றியும் சமுக வலைதளங்களில் விவசாயிகளும், சமுக செயற்பாட்டாளர்களும் அவர்களின் கேளி சித்திரங்களை வைரலாக்கிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராட்டையுடன் விவசாயிகள் சத்தியாகிரகம்; மஜகவின் தமிமுன் அன்சாரி  பங்கேற்பு

Published on 15/08/2023 | Edited on 15/08/2023

 

nn

 

இன்று சென்னை பெசன்ட் நகரில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகளின்  25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

 

ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி காந்திய வழியில், ராட்டையை முன்வைத்து நடைபெற்ற அமைதியான இந்நிகழ்வில், மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி  பங்கேற்று பேசினார்.

 

அவர் பேசியதிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு, “விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு என்றார் காந்தியடிகள். அவரது வழியில் ராட்டையை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தகைய நூதன போராட்டம் பற்றி சிந்திக்கும் தலைமைத்துவம் பி.ஆர்.பாண்டியனிடம் உள்ளது. விவசாய சங்கத்தை துடிப்புடன் கட்டமைத்து, முழு நேரமாக விவசாயிகளுக்காக பாடுபடும் விவசாயப் போராளியாக உருவெடுத்துள்ளார்.

 

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தப் போது, விவசாயிகளின் பிரதிநிதியாகவே செயல்பட்டேன். விவசாயிகள் என்பவர்கள் கபடமற்ற தொழிலாளிகள். பயிர்களும் வாழ வேண்டும், உயிர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். எனவே, விவசாயிகள் எங்கு பாதிக்கப்பட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். நமது நாட்டில் விவசாயிகள் பல வகையிலும் பாதிக்கப்படுகிறார்கள். மணிப்பூரில் நடப்பது சமூக- இன மோதலாக மட்டும் பார்க்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் பிரச்சனை அதில் உள்ளது.

 

குக்கி இன விவசாயிகளின் மலை நிலங்களை பறித்து கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கும் சதித்திட்டம் அதில் உள்ளது. பழங்குடியின உரிமையை மற்றவர்களுக்கும் கொடுத்து, அதன் வழியாக நிலங்களை பறித்து, அதானி - அம்பானிகளுக்கு வழிவிடும் சதி அதில் அடங்கியுள்ளது. அதேபோல் ஹரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு பின்பும் ஒரு காரணம் உள்ளது.

 

nn

 

அந்த முஸ்லிம்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்களிடம் சொந்த நிலங்கள் உள்ளது.டெல்லியில் நாடு தழுவிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அவர்களுக்கு உணவு அனுப்பி உதவியவர்கள் அவர்கள்தான். அதனாலேயே இப்போது குறி வைக்கப்பட்டுள்ளார்கள். இதை அறிந்து கொண்ட ஹரியானா விவசாயிகள், தங்களது சக முஸ்லிம் விவசாயிகளுக்கு ஆதரவாக திரண்டுள்ளனர். எனவே, விவசாயிகள் நாட்டில் நடைபெறும் பிரச்சனைகளின் பின்னணி நுட்பங்களை புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

இப்போது நாம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளைத் தான் வைக்கிறோம். நெருக்கடி கொடுக்கும் நோக்கம் இல்லை. எனவே, இக்கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அடுத்த கட்ட வளர்ச்சியையும், நவீன தொழில் நுட்பத்தையும், உலகளாவிய சந்தையையும் அறிய அவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி பட்டறை (Workshop) நடத்த பி.ஆர்.பாண்டியன் திட்டமிட வேண்டும். ஏனெனில், உலகளாவிய உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகளை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

தாய்லாந்து விவசாயிகள் தங்களது உற்பத்தியை உலக சந்தைக்கு கொண்டுச் செல்கிறார்கள். நுங்கையும், இளநீரையும் கூட டின்களில் அடைத்து விற்கிறார்கள். இங்கு நாம் இளநீரின் மகத்துவத்தையும், பனை மரத்தின் பொருட்களையும் உலகளவில் சந்தைப்படுத்தாமல் உள்ளோம். உள்நாட்டில் தென்னையிலிருந்து உருவான 'நீரா பானம்’ என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. விவசாயிகளின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சியாகும்”என்றார். 

Peasants satyagraha with rattai

 

முன்னதாக பேசிய பி.ஆர்.பாண்டியன் அவர்கள், கடந்த 2016 - 2021 காலத்தில் விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளையும் இவர் மூலமாக சட்டமன்றத்திற்கு நாங்கள் கொண்டு சென்றோம் என்றும், இப்போதும்  மக்களுக்கான போராட்ட களத்தில் முதல் நபராய் இருப்பவர் நமது தமிமுன் அன்சாரி என்றும் பாராட்டி பேசினார்.

 

இன்றைய போராட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:-

 

நில ஒருங்கிணைப்பு சட்டம்- 2023 ஐ திரும்ப பெற வேண்டும்; நெல்லுக்கு  குவிண்டாலுக்கு 3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு 4 ஆயிரம் தர வேண்டும்;தமிழ்நாட்டுக்கென தனி வேளாண் காப்பிட்டு திட்டத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும்; காவிரி , முல்லை பெரியாறு உரிமைகளை பாதுகாத்திட வேண்டும்; விவசாய நிலங்களை கையகப்படுத்தி போடப்படும் சாலைகளில் சுங்க கட்டண வருவாயில் (TOLL GATE) ஒரு பகுதியை அந்த நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட  25 கோரிக்கைகளுடன் இன்றைய சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

 

 

 

Next Story

என்.எல்.சி நிலம் கையகப்படுத்தும் இடத்திற்கு செல்ல பி.ஆர்.பாண்டியனுக்கு அனுமதி மறுப்பு

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

NLC administration denied permission to go to land acquisition site

 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே  வளையமாதேவி, மேல் வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில்  என்.எல்.சியால் நிலம் கையகப்படுத்தப்பட்டு வாய்க்கால் வெட்டும் இடமான  வளையமாதேவிக்கு செல்ல முயன்ற காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

 

இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''1956-ல் என்எல்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. அன்றைக்கு மக்கள் வரவேற்றார்கள். விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தார்கள். வேலைவாய்ப்பு பெருகும். வருவாய் பெருகும் என நம்பி நிலங்களை கொடுத்தார்கள். இரண்டாவது சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. முதல் சுரங்கம் அமைக்க விவசாயிகள் நிலம் கொடுத்த போது வழங்கிய நிலங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இன்று வரை அந்த குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்று கூட ஒப்பந்த தொழிலாளர்கள் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடுகிறார்கள்.

 

நிலத்தை கொடுத்தவர்கள் வேலை கேட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். முதல் சுரங்கம் அமைக்கின்றபோது உறுதியளித்தபடி அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏற்கனவே பரவனாறு வடிகால் வழியாக தண்ணீர் வெளியேறி விவசாய நிலங்களை பாதித்திருக்கிறது. இப்போது பரவனாறு வடிகாலை ஆக்கிரமிப்பு செய்து வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

 

NLC administration denied permission to go to land acquisition site

 

இரண்டாவது சுரங்கத்திற்கு நிலங்களை தர மாட்டோம் என விவசாயிகள் மறுத்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு என்எல்சி நிறுவனம் ஒப்புக்கொண்டபடி இழப்பீடு தொகை வழங்கவில்லை. தற்போது 25 லட்சம் இழப்பீடு, வேலை என முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் இவை எதுவும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. நேற்று முன்தினம் ஒட்டுமொத்த பேரழிவை என்எல்சி நிர்வாகத்தால் கடலூர் மாவட்டம் சந்தித்திருக்கிறது. என்.எல்.சியை வெளியேற்ற வேண்டும் என்ற இறுதி கட்ட போராட்டம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு காவல்துறையை வைத்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. வழக்கு போட்டு மிரட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல். ஒட்டுமொத்த இந்த நெய்வேலி பகுதி இந்திய வரைபடத்தில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. காவல்துறை கிராமங்கள் முழுவதும் குவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நிலத்தைப் பிடுங்காதே, வாழ்வாதாரத்தை அழிக்காதே என மக்கள் கதறுகிறார்கள். பேரழிவை ஏற்படுத்தும் என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில், வேளாண்மைதுறை, நீர்பாசன துறை, சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து என்.எல்சி.யால்  பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பி விவசாயிகளிடம் கருத்துக்கேட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

 

ஏற்கெனவே என்.எல்.சி நிறுவனத்திற்காக நிலங்களை கொடுத்தவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலமைச்சர் தலைமையில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தி ஆய்வு அறிக்கை அடிப்படையில் என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். முதல் சுரங்கத்திற்கு வடிகால் வசதி இல்லாததால் அந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து விவசாயிகளையும், கட்சிகளையும் ஒருங்கிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

 

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து உயர்மட்ட குழுவை அனுப்ப வேண்டும். என்னை தடுப்பதன் மூலம் மனித உரிமை மீறலில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. முதலமைச்சரின் மௌனம் என்பது ஆட்சியின் தவறான செயல். இதனால் தமிழக விவசாயிகள் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். மக்களின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் வாய் திறந்து பேசி மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்'' என கூறினார்.