
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 66 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையில் அமர்ந்துள்ளது. அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பு, அதிகாரம் குறித்து பார்ப்போம்
ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சி எதிர்க்கட்சிக்கான தகுதியைப் பெறுகிறது. எதிர்க்கட்சி என்ற தகுதியைப் பெற குறைந்தபட்சம் 24 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவைக் குழு தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார். சட்டப்பேரவைத் துணைத் தலைவருக்கு உரிய தகுதியை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பெறுகிறார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு அலுவலக அறை, வாகனம், பணியாளர் உள்ளிட்ட வசதிகள் அமைச்சருக்கு நிகராக அளிக்கப்படும். லோக் ஆயுக்தா உள்ளிட்ட குழுக்களில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கு முக்கிய இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.