Skip to main content

மேட்டூர் அனல், நீர்மின் நிலையங்களில் 610 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்!

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
me

 

மேட்டூர் அனல் மின்நிலையம் மற்றும் நீர் மின்நிலையங்களில் 610 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 


மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 யூனிட்டுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு யூனிட்டும் செயல்பட்டு வருகிறது. 


இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். நேற்று பிற்பகலில் முதல் பிரிவில் உள்ள மூன்றாவது யூனிட்டில் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. தேவை குறைவு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டதாக, மேட்டூர் அனல் மின்நிலைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.


இதேபோல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டதால், மேட்டூர் அனல் மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 5 கதவணைகளில் 400 மெகாவாட் மின்உற்பத்தி தடைப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 610 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எங்களை விவசாயம் செய்யவிடுங்கள்’ - போராடும் பொதுமக்கள்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
The public protest against to be set up power plant in mayiladuthurai

சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் பவர் பிளான்ட் அமைக்கப்போவதை கண்டித்து போராட்டத்திற்கு ஆயத்தமாகும் பொதுமக்களிடம் வட்டாட்சியர் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நெப்பத்தூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், மெகா கிரைடு வோட்டர்ஸ் என்ற பவர் பிளான்ட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, மேற்கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பவர் பிளான்ட், தங்களது கிராமத்தில் அமைந்தால் தங்களின் விவசாயமும், வாழ்வாதாரமும் பறிபோகும் என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவகாரத்தின் வீரியம் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் தலைமையில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மற்றும் பவர் பிளான்ட் நிர்வாகிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், “இந்த பவர் பிளான்ட் அமைய உள்ள இடம் முழுவதும் விவசாயம் நடைபெறக்கூடிய இடமாக உள்ளது. மேலும், பவர் பிளாண்ட் அமைப்பது தொடர்பாக கிராமத்திலும், மற்ற எந்த துறையிலும் அனுமதி பெறவில்லை. எனவே, இந்த பகுதியை ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்க வேண்டும். அதன் பிறகு, பவர் பிளான் அனுமதி வழங்கும் பட்சத்தில் இது தொடர்பான நன்மை, தீமைகளை கிராம பொதுமக்களிடம் துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கி கூற வேண்டும்” என கிராம மக்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. 

The public protest against to be set up power plant in mayiladuthurai

அதன் பின்னர், மக்களின் கோரிக்கைகளை ஏற்று, பவர் பிளான்ட் அமைப்பது தொடர்பாக அனுமதி பெற வேண்டிய அனைத்து துறைகளிடமிருந்தும் அனுமதி பெற்று, பிறகு கிராம ஊராட்சியில் அனுமதி பெற்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்த பின்பு சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என வட்டாட்சியர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.