Power outage! People besieged by the NLCI!

Advertisment

கடலூர் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகேயுள்ள சிவாஜி நகர், திருவள்ளுவர் நகர், ஐ.டி.ஐ நகர், பழைய காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தின் மூலமாக குடிநீர் மற்றும் மின் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு இப்பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வீடுகள் மட்டுமின்றி அஞ்சல் அலுவலகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் நாளொன்றுக்கு 20 நிமிடத்திற்கு மேல் மின், குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை கண்டித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று மந்தாரக்குப்பம் பகுதியில் இருக்கும் என்.எல்.சி குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அந்த பகுதியில் உள்ள அஞ்சலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Advertisment

இதுபற்றி தகவல் அறிந்து வந்த நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மற்றும் மந்தாரக்குப்பம் காவல் ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "இங்கு அஞ்சலகம் செயல்பட வேண்டுமா... வேண்டாமா??" என அஞ்சலக ஊழியர்கள் கேள்வி எழுப்ப காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், என்.எல்.சி அதிகாரிகளிடம் பேசி தகவல் தருகிறோம் எனக் கூறினர். அதனைத் தொடர்ந்து அஞ்சல் அலுவலகம் மற்றும் நியாய விலை கடைக்கு மட்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது. பின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று எண்ணி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.