Poultry shop fire incident-Police investigation

ஈரோட்டில் கோழிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு கூண்டோடு கோழிகள் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (49). இவர் ஈரோடு சென்னிமலை ரோட்டில் நாட்டுக்கறிக்கோழி கடை நடத்தி வந்தார். இந்த கடையில் உள்ள கூண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள், காடைகளை வளர்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

நள்ளிரவு 12.45 மணி அளவில் அவரது கடையிலிருந்து கரும்புகைகள் வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் கடையில் கூண்டில் இருந்த 150 நாட்டுக் கோழிகள், 100 காடைகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன.

Advertisment

மேலும் இந்த விபத்தில் கடையில் இருந்த தீவனங்கள், பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. கடையில் இருந்த சிசிடிவி கேமராவும் தீயில் கருகியது. லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாசவேலை காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் விசாரணையைத்தீவிரப்படுத்தி உள்ளனர்.