/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajenthirabalaji-in_0.jpg)
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய வழக்கின் விசாரணையை, டிசம்பர் 17-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், தனது பதவியைத் தவறாக பயன்படுத்தி,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், கடந்த 2014-ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தன் மனுவில், 7 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்ந்துள்ள ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி சத்தியநாரயணன் தலைமையிலான அமர்வு, கடந்த 1996- ஆம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சி தலைவராக ராஜேந்திர பாலாஜி பதவியில் இருந்தது முதல் அவருடைய சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.க்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று,விசாரணையை டிசம்பர் 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)