Skip to main content

கொடைக்கானலில் படகுப் போட்டி ஒத்திவைப்பு!

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
Postponement of boat race in Kodaikanal

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 61 வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. இந்த கோடை விழா வரும் 26 ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இங்கு தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை மூலமாக கோடை விழாவும் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணி வகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

அதே சமயம் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று (21.05.2024) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை காரணமாக பெய்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் கோடை விழாவில் முக்கிய விழாவாக இன்று (21.05.2024) நடைபெற இருந்த படகுப் போட்டி தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படகுப் போட்டியானது வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Chief Minister M.K. Stalin letter To the Union Minister

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடகோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “சமீப வாரங்களில் இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் கவலைப்படத் தெரிவித்துள்ளார். அதோடு, IND-TN-10-MO-1379 மற்றும் IND-TN-09-MO-2327 என்ற பதிவெண்களைக் கொண்ட இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும், இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் நேற்று (01.07.2024) இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

Chief Minister M.K. Stalin letter To the Union Minister

1974 ஆம் ஆண்டிலிருந்தே, அப்போதைய மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை நிலவுவதாக மத்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தனது 27-6-2024 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும், தனது எதிர்ப்பை தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, இது சம்பந்தமாக மாநில அரசுடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய மீனவர்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய மத்திய  அரசுதான் என்று தனது கடிதத்தில் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். 

Chief Minister M.K. Stalin letter To the Union Minister

அப்போதைய தி.மு.க. தலைவர் கலைஞர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, அதில்‘மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பிற்கு முரணானதாக இருக்கும்போது, கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது’ என்று திட்டவட்டமாகக் கூறியிருந்ததை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார். பா.ஜ.க. தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சினையைத் தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், கச்சத்தீவை மீட்கக் குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும் எனத் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான விளைவித்து வரும் இந்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
10 Tamil Nadu fishermen arrested

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் வழக்கம் போல் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரைக் கைது செய்தனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கைதான 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்களின் விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரைக் கைது செய்யப்பட்டனர். இதனையொட்டி கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (24.06.2024) ஒரு நாள அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.