ADVERTISEMENT

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது - உயர் நீதிமன்றம்  

02:49 PM Jul 31, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான வேலூர் மாவட்டம் சோழிங்கரைச் சேர்ந்த செந்தில்குமார், துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல்நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்கக் கோரி அரசுக்கு விண்ணப்பித்தார். ஆனால், கல்லூரிக்குச் சென்று இளங்கலை பட்டப்படிப்பை படிக்காமல், தொலைதூர கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளதால், பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என வணிகவரித் துறை அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதனை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த வழக்கில் விசாரித்த தனி நீதிபதி, அரசு நிர்ணயித்துள்ள தகுதி என்பது, பணி நியமனத்திற்கானதுதானே தவிர, பதவி உயர்வுக்கு அல்ல எனக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்ததுடன், பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமார் பெயரை சேர்க்கவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறை தலைவரும், வணிகவரித் துறைச் செயலாளரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறைத் தலைவர், வணிகவரித்துறைச் செயலாளர் ஆகியோரின் தரப்பில் அரசு வழக்கறிஞர் இரா. நீலகண்டனும், சார் பதிவாளர் செந்தில்குமார் தரப்பில் எம். ராமமூர்த்தியும் ஆஜரானார்கள்.

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், திறந்தநிலை பல்கலைக்கழகம் அல்லது தொலைதூரக் கல்வி மூலம் பட்டப்படிப்பு முடிக்காமல், பட்ட மேற்படிப்பு படித்தவர்களைப் பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரை சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT