Skip to main content

சென்னையில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Postal voting begins in Chennai

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகத் தபால் வாக்கு செலுத்தும் வசதி தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணி இன்று (08.04.2024) முதல் தொடங்குகிறது. இன்று காலை 10:30 மணிக்குத் தொடங்கும் தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணி தொடங்க உள்ளது. தபால் மூலம் வாக்களிக்க 85 வயதுக்கு மேற்பட்ட 4 ஆயிரத்து175 முதியவர்கள் மற்றும் 363 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்