Postal votes in the name of the deceased? Action of the authorities

சட்டமன்றத்தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் சமீபத்தில் தெரிவித்திருந்தது. அதன்பேரில் அவர்களில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 80 ஆயிரம் பேரில், 8 ஆயிரத்து 459 பேர் தபால் ஓட்டுப் போட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர்.

Advertisment

இதைத் தொடர்ந்து, கடந்த 27ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகள் போட்டு வருகிறார்கள். இதற்காக, தேர்தல் பிரிவு அதிகாரி, நுண் பார்வையாளர், போலீசார் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் குழுவாகச் சென்று தபால் வாக்குகளைச் சேகரித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் நேற்று வரை சுமார் 90 சதவீதம் பேர் தபால் வாக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இறந்தவர்களின் பட்டியலில் உள்ள சிலரது பெயர்களிலும் தபால் வாக்குகளுக்கு விண்ணப்பித்திருந்தது தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத்தொகுதிகளில் தபால் வாக்குகளைச் சேகரித்து வரும் தேர்தல் பிரிவு அதிகாரிகள், சில வீடுகளுக்குச் சென்றபோது தபால் வாக்குகள் விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே இறந்திருந்தது தெரியவந்துள்ளது. ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக 5 பேர் வரை இறந்துள்ளனர்.

Advertisment

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “தபால் வாக்குகள் கேட்டு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள். அவர்கள் தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்கும் போது நலமாக இருந்திருப்பார்கள், ஆனால் ஒரு மாத காலத்தில் இறந்திருக்கலாம். இந்நிலையில் இறந்தவர்களின் பெயரில் தபால் ஓட்டுப் போட விண்ணப்பித்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.