/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/659_4.jpg)
திடீரென இரவு நேரத்தில் தபால் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் காமராஜர் வீதியில் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் இயங்கி வருகிறது. நகரத்தின் மையப் பகுதி என்பதால் எப்போதும் பரபரப்பாக இருக்கும். நேற்று மாலை 6 மணி அளவில் தபால் அலுவலக ஊழியர்கள் அனைவரும் பணி முடிந்தது வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் இரவு சுமார் 8 மணி அளவில் தபால் அலுவலகத்தில் இருந்து குபுகுபுவென தீப்பிடித்து எங்கும் கரும்புகை பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள், தபால் நிலைய அலுவலக கதவுகளைத் திறந்து உள்ளே புகுந்தனர்.
உள்ளே இரண்டு கம்ப்யூட்டர்கள், டேபிள் என அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. சுமார் அரை மணி நேரம் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அலுவலகத்தை ஆய்வு செய்ததில் அங்கிருந்த 30 லட்ச ரூபாய் பணம் தீப்பிடிக்காமல் தப்பியுள்ளது கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். தீவிபத்துக்கு காரணம் மின் கசிவு என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)