Advertisment

'அவதூறு பரப்பிய பிரபல யூடியூப் சேனல்'- நஷ்ட ஈடு கேட்கும் மலேசிய தயாரிப்பாளர்

nn

Advertisment

மலேசியா நாட்டை சேர்ந்தவர் அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் என பன்முகத்தன்மை கொண்டவர். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல ஆயிரம் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையை பாராட்டி மலேசிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சர்வதேச அளவில் ‘மாஸ்டர் கிளாஸ் தொழில் முனைவோர்‘ என்ற விருதும் பெற்றுள்ளார்.

கடின உழைப்பு மூலம் இளம் வயதிலே பல சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ள அப்துல் மாலிக் பின் தஸ்திகீர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டது. அதில், சமீபத்தில் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக் என்பவருக்கும் அப்துல் மாலிக் அவர்களுக்கும் தொடர்பு உண்டு என்ற அவதூறு செய்தி வெளியானது. உண்மைக்கு புறம்பாக அவதூறு செய்தி வெளியிட்ட சில யு.டியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் 18.03.2024 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்து அப்துல் மாலிக் பின் தஸ்திகீர் அவர்களின் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, 'அப்துல் மாலிக் மலேசியாவில் புகழ்பெற்ற தொழிலதிபர். அவருடைய நிறுவனங்களில் ஒன்றான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சினிமா தொடர்புடைய பல வர்த்தகம் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழ் படங்களைவை மலேசியாவில் விநியோகம் செய்து வருகிறார். இணை தயாரிப்பாளராக பல தமிழ் படங்களையும் தயாரித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பல உதவிகளையும் தன்னலம் பார்க்காமல் செய்து வருகிறார். அவருடைய இந்த சேவைகளை பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதை கொடுத்து கெளரவித்துள்ளது.

Advertisment

தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் பல நட்சத்திர கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மலேசியா வரும்போது சினிமா சார்ந்து பல ஆலோசனைகளையும், வழிநடத்துதலையும் அப்துல் மாலிக்கிடம் கேட்பதுண்டு. இதன் காரணமாக அப்துல் மாலிக்கின் வளர்ச்சியை பிடிக்காத சில விஷமிகள் சமூக வலைத்தளங்களில் அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தீய நோக்கத்துடன் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அதை அடிப்படையாக கொண்டு மேலும் பல யூடியூப் சேனல்கள் செவி வழி செய்தியை உண்மை என்று நம்பி எந்தவித விசாரணை, முன் அனுமதியும் இல்லமால் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

வீடியோ பதிவுகள் அப்துல் மாலிக் நற்பெயரை களங்கப்படுத்தி இருப்பதோடு, மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அதை சட்டபூர்வமாக அணுகும் விதமாக பொய் வீடியோ வெளியிட்ட நிறுவனங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனுவும் அளித்துள்ளோம். அந்த புகாரில், அவதூறு வீடியோக்களை நீக்குவதோடு, பொதுவெளியில் அப்துல் மாலிக் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது, இந்திய மதிப்பில் ரூபாய் ஐந்து கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்'' என்றனர்.

Youtube
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe