sc

சேலத்தை அடுத்த இரும்பாலை அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் குட்டி என்கிற குமார் (24). இவருடைய பக்கத்து வீட்டில் மூதாட்டியும், அவருடைய 6 வயது பேத்தியும் வசித்து வருகின்றனர். சிறுமியின் பெற்றோர் இறந்துவிட்டதால் பாட்டியே சிறுமியை வளர்த்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி, பக்கத்து வீட்டு சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்த குட்டி என்கிறார் குமார், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தார். இதுகுறித்து அப்போது வழக்குப்பதிவு செய்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகேஸ்வரி, குட்டியை கைது செய்தார்.

Advertisment

இந்த வழக்கின் விசாரணை, சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று (ஜூலை 31, 2018) தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி விஜயகுமாரி, பாலியல் வன்புணர்வு குற்றத்தில் ஈடுபட்ட குட்டி என்கிற குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றவாளிக்கு சிறை தண்டனை பெற்றுக்கொடுத்ததற்காக அரசுத்தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் காந்திமதி, வழக்கு விசாரணைக்கு உறுதுணையாக இருந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, நீதிமன்ற ஏட்டு ஆனந்தவள்ளி ஆகியோரை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் பாராட்டினார்.

Advertisment