Advertisment

உற்சாகமாக துவங்கிய பிரபல குதிரை சந்தை... வியாபாரம் சூடுபிடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள்!

The popular horse market that started enthusiastically

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ்பெற்ற மாட்டுச்சந்தை உள்ளது. இந்தச் சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம்வரை நடைபெறும் சந்தையில், சுமார் 5 முதல் 8 கோடி ரூபாய் வரை மாடுகள் விற்பனை நடைபெறும். இந்நிலையில், இன்றுமுதல் (04.08.2021) மாட்டுச்சந்தையின் ஒரு பகுதியில் குதிரை சந்தையும் தொடங்கப்பட்டுள்ளது. திடீர் ஏற்பாட்டில் தொடங்கப்பட்ட இந்தக் குதிரை சந்தையில் கத்தியவார், மார்வார் ரகம், கலப்பினம், நாட்டுக் குதிரை, பந்தயக் குதிரைகள் என பல்வேறு வகையான குதிரைகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்கு வந்திருந்தன.

Advertisment

சுமார் 10 ஆயிரம் தொடங்கி 2 லட்சம் வரை மதிப்பிலான குதிரைகள் இதில் இடம்பெற்றிருந்தன. இதுமட்டுமின்றி, குதிரை வண்டிகளும் விற்பனைக்கு இருந்தன. இதேபோல் சந்தையில் குதிரையில் ஏறி வலம் வந்ததுடன், குதிரை நடனத்தையும் செய்து காண்பித்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை குதிரை வளர்ப்போர் உற்சாகப்படுத்தினர். இவை அங்கு குதிரை வாங்க வருவோர்களையும் கவர்ந்தது. சந்தைக்கு வந்த பலரும் ஆர்வத்துடன் குதிரைகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்தியூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில்தான் குதிரை சந்தை நடைபெற்றுவந்த நிலையில், தற்போது மணப்பாறையில் மாட்டுச் சந்தையுடன் சேர்த்து குதிரை சந்தையையும் தொடங்கியுள்ளது. குதிரை உபயோகத்தை அதிகப்படுத்துவதன் மூலம் குதிரை வளர்ப்பையும் அதிகப்படுத்த முடியும், இதனால் அழிந்துவரும் குதிரை இனத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்த நாட்டுக் குதிரைகளைக் காப்போம் என்ற குழு மூலமாக இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என குதிரை வளர்ப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மாட்டுச் சந்தையைப்போல் மணப்பாறை குதிரைச் சந்தையையும் மக்களிடையே கொண்டு சேர்த்து பிரபலப்படுத்தி புகழ்பெறச் செய்வோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். இன்று தொடங்கப்பட்ட சந்தைக்கு 25 குதிரைகள் மட்டுமே வந்திருந்தன. குதிரைகளைக் காண வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் பார்த்து,விலைகுறித்து கேட்டறிந்தனர். முதல் நாளிலேயே பலரும் ஆர்வம் காட்டியதால், வரும் வாரங்களில் குதிரைகளுக்கு வரவேற்பு அதிகரிப்பதுடன் வியாபாரமும் சூடுபிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

horse Manaparai trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe