திருவள்ளூர் மாவட்டம் களப்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்தவர் தனுஷ். இவர் தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு விஜய்ஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு தனுஷ் இல்லாததால் அவரது 17 வயது சகோதரரை கடத்திச் சென்று பின்னர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக தனுஷின் தாயார் லட்சுமி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கேவி. குப்பம் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விஜயஸ்ரீயின் தந்தை உட்பட 5 பேரை கைது செய்தனர். இத்தகைய சூழலில் தான் போலீசார் தன்னையும் கைது செய்யக்கூடும்என்று என்னிய பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் அமர்வில் இன்று (27.06.2025) மீண்டும் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் வாதிடுகையில், “இந்த வழக்கை பொறுத்த வரையில் பூவை ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை. விசாரணைக்காக எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை. வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்ற தினத்தில் திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டார். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பலர் உதவி கேட்பார்கள். அப்படிதான் மகேஸ்வரி என்பவர் உதவி கேட்டார். சட்டப்படி செய்யுங்கள் என்றுஅறிவுறுத்தினேன்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை சார்பில் ஆதரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே.வி. ரவீந்திரன், “பூவை ஜெகன்மூர்த்திக்கு எதிராக அளித்த வாக்குமூலத்தில் அவருக்கு தொடர்புள்ளது குறித்து தெரிய வருகிறது. போலீஸ் விசாரைனையின் போது ஜெகன்மூர்த்தி அளித்த வாக்கு மூலத்தில் முரண்பாடுகள் உள்ளது. இந்த சம்பவத்தில் அவருக்கு தீவிர ஈடுபாடு இருந்திருக்கிறது. இந்த சம்பவத்தின் மூளையாக பூவை ஜெகன்மூர்த்தி செயல்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணையின் போது பூவை ஜெகன்மூர்த்தி முழுமையாக ஒத்துழைக்கவில்லை. அவருடைய பதில் என்பது ஒரு மலுப்பலாக இருந்தது. தெளிவாக இல்லை. அவருக்கு முன் ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைத்து விடுவார். இந்த வழக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் இந்த வழக்கில் ஏஜிபிக்கு தொடர்பும் உள்ளது. புகைப்படஆதாரங்கள் உள்ளன. இந்த சம்பவத்தின் போது பூவை ஜெகன்முர்த்தியும், ஏடிஜிபியும் சந்தித்து பேசியுள்ளனர். எனவே இந்த முன்ஜாமீன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இந்த வாதங்களை பதிவு செய்துக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், “வாக்குமூலம், சம்பவம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள், சிசிடிவி கேமரா காட்சிகள் என அனைத்தையும் அலசி பார்க்கும்போது இந்த வழக்கில் அவருக்குள்ள தொடர்பு குறித்து ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது. எனவே பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல்செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.