
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் காணாமல் போன நிலையில் சிறிது நேரத்திலேயே போலீசார் கண்டுபிடித்துக் கொடுத்த சம்பவத்தில் அம்மாவை பார்த்தவுடன் நான்கு வயது சிறுவன் முத்தமழை பொழிந்த சம்பவம் பூந்தமல்லியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பூந்தமல்லி முல்லா தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் மனோகரன்-அனுசுயா தம்பதி. இவர்களுக்கு நான்கு வயதில் ஆதிரன் என்ற மகன் உள்ள நிலையில் தம்பதி இருவரும் இன்று வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் தன்னுடைய மகனை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. காணாமல் போன சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். குழந்தை கடத்தப்பட்டு இருக்கலாம் என அச்சமடைந்து பூந்தமல்லி காவல்துறையில் புகார் கொடுத்தனர்.
போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் இருந்து விஜயா என்ற செவிலியர் காவல்துறையை தொலைப்பேசியில் அழைத்துள்ளார். மருத்துவமனையில் 4 வயது சிறுவன் ஒருவன் இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியே வந்த சிறுவனை அந்த பகுதியில் மக்கள் மருத்துவமனையில் விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். காணாமல் போன சிறுவனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பூந்தமல்லி போலீசார் மற்றும் சிறுவனின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு போலீசார் சந்தேகித்தது போலவே காணாமல் போன ஆதிரன் இருந்தது தெரிய வந்தது. தாயைப் பார்த்ததும் சிறுவன் ஆதிரன் தாய்க்கு முத்தமழை பொழிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.