
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே இருக்கக்கூடிய காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதற்காகப் பிரதமர் மோடி பெங்களூரிலிருந்து மதுரை விமான நிலையத்திற்குத் தனி விமானம் மூலம் வந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகை காரணமாக ஏற்கனவே மதுரை விமான நிலையத்திற்கு ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். இருவரையும் ஒன்றாக அழைத்து பிரதமர் பேசினார் என்ற தகவல் வெளியானது.
மதுரையிலிருந்து திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்கள் மோடியைச் சந்தித்து வரவேற்றனர். பாஜக சார்பிலும் பொன். ராதாகிருஷ்ணன் போன்றோர் மோடியை சந்தித்து வரவேற்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் வந்திறங்கிய பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு பொன்னாடை அணிவித்து பொன்னியின் செல்வன் தமிழ் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பினை வழங்கி வரவேற்றார்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உரையாற்ற இருக்கின்றனர்.