Skip to main content

பொன்னமராவதி  ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளால் பதற்றம்

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

 


பொன்னமராவதி  ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

 

w

  

 ஒரு சமுதாய பெண்களை இழிவாக பேசியதாக ஆடியோ வெளியான சம்பவத்தில் பொன்னமராவதியில் தொடங்கி தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் பரவியுள்ள போராட்டத்தின் மத்தியில் அதே சமூக நபர்களே ஆடியோ வெளியிட்டதாக பரப்பப்படும் பதிவுகளால் மேலும் பரபரப்பும், பதற்றமும் எற்பட்டுள்ளது.

 

    கடந்த 16 ந் தேதி சமூக வலைதளங்களில் பரவிய ஒரு ஆடியோவில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவர் சார்ந்துள்ள சமூக பெண்களை இழிவாக பேசிக் கொள்வதான உரையாடல் வெளியானது. அந்த குரல் பதிவு குறித்து தஞ்சாவூர் சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் 17 ந் தேதி தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

    இந்த நிலையில் 18 ந் தேதி பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததுடன் இரவில் காவல் நிலையம் முற்றுகை மறு நாள் பேருந்து நிலையம் முற்றுகை மற்றும் தடியடி, கல்வீச்சு சம்பவங்களும் நடந்ததால் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

 போலிசார் சம்மந்தப்பட்ட ஆடியோ எங்கிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய வாட்ஸ் அப் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர். மேலும்,  சம்மந்தப்பட்ட ஆடியோ பதிவுகளை பகிர்வதால் மேலும் பிரச்சனைகள் எற்படுவதால் பகிர்ந்த சிலரை பிடித்து விசாரனை செய்து வருகின்றனர். இந்த அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் சிலரிடம் விசாரனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில நபர்கள் தான் குரல் பதிவு செய்தது என்று சமூக வலைதளங்களில் படங்களுடன் பதிவிட்டவர்கள் மீது திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கீரமங்கலம் பகுதியில் உள்ள சில இளைஞர்களிடம் போலிசார் விசாரனை செய்தனர்.

 

    இந்த நிலையில் பட்டுக்கோட்டை மற்றும் திருச்சிற்றம்பலம் பகுதியில் போலிசார் விசாரனை செய்த நபர்கள் தான் குறிப்பிட்ட ஆடியோ பதிவுகளை வெளியிட்டவர்கள் என்றும், அவர்களும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று யாரோ சிலரது படங்களையும் இணைத்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதனால் அந்த பதிவுகளும் வேகமாக பரவி வருவதால் இது குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோபமடைந்துள்ளனர். மேலும் இது போன்ற தவறான பதிவுகளை பகிரும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் போராட்டம் நடத்தும் மக்கள்.
                

சார்ந்த செய்திகள்

Next Story

பெண்களை இழிவாக பேசிய ஆடியோ விவகாரம்.. வதந்தி பரப்பியவர் கைது!

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

கடந்த 16 ந் தேதி தமிழ்நாடு முழுவதும் கடைசி கட்ட பரப்புரையில் வேட்பாளர்கள் தீவிரமாக இருந்த நிலையில் அதைவிட பரபரப்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி வட்டார மொழியில் பேசிய ஒரு ஆடியோ வெளிவந்தது.
 

ponnamaravathi



அந்த ஆடியோ உரையாடல் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை தூண்டிவிட்டுள்ளது.
 

இந்த ஆடியோவால் தஞ்சை தொகுதி பொட்டலங்குடிக்காடு மக்கள் தேர்தலை புறக்கணித்தனர், பிறகு சமாதானம் செய்யப்பட்ட பிறகு வாக்களித்தனர். அன்று இரவு புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதியில் காவல் நிலையம் முற்றுகையில் தொடங்கி, 19ந் தேதி தடியடி கல்வீச்சு என்று நகர, சுற்றியுள்ள 49 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டதால், அந்த பகுதியில் போராட்டம் குறைந்தாலும் மற்ற பகுதிகளில் போராட்டம் வெடித்தது. பெண்கள் துடைப்பத்துடன் போராடச் சென்றனர்.
 

இந்த நிலையில் வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்ட நபரை பிடிக்க கலிஃபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனத்தின் உதவியை புதுக்கோட்டை போலிசார் நாடியுள்ளனர். இந்த நிலையில்தான் சமூகவலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட நபரின் படத்துடன் வெளியான பதிவில் படத்தில் உள்ளவர்தான் பெண்களை இழிவாக பேசிய ஆடியோ வெளியிட்ட நபர் என்றும், அவர் கைது செய்யப்படும் வரை பகிருங்கள் என்றும் அந்த பதிவு இருந்தது. இந்த பதிவும் வேகமாக பரவியதால் அந்த படத்தில் இருந்த தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் அய்யாச்சாமி.. 
 

என் படத்துடன் தவறான பதிவை பரப்பி வருகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் வதந்தி பரப்புவதாக கொத்தமங்கலம் செல்வராஜ் மகன் குகன் மற்றும் மற்றொரு நபர் மாரிமுத்து என்றும் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். 


அந்த புகாரின் அடிப்படையில் கொத்தமங்கலம் குகனை திருச்சிற்றம்பலம் போலிசார் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை ஏடிஎஸ்பி இளங்கோவன், பட்டுக்கோட்டை டிஎஸ்பி கணேசமூர்த்தி ஆகியோர் விசாரணை செய்தனர். 2 நாட்கள் நடந்த விசாரணைக்கு பிறகு சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பினார் என்று கைது செய்துள்ளனர்.


மேலும் இதே போல பலரும் தவறான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதாவது... போராட்டத்திலுள்ள குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களே ஆடியோ வெளியிட்டதாகவும், அந்த வதந்திகள் பரவுவதால் அந்த தகவலை பரப்பும் நபர்களையும் பிடித்து விசாரணை செய்தால்தான் வீண் வதந்திகள் பரவாமல் தடுக்க முடியும் என்று சொல்லும் போலிசார் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதே தவறான பதிவுகளை போலிசாரும் பகிர்வதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

 

Next Story

பொன்னமராவதி கலவரத்தை அடக்க 144 உத்தரவிட்ட கோட்டாட்சியர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்... அதிகாரிகள் அதிர்ச்சி!!!

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

பொன்னமராவதியில் நடந்த மக்கள் போராட்டம் கலவரமாக மாறி தடியடி, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் ஐ.ஜி., ஆட்சியர் முன்னிலையில் கலவரத்தை பரவவிடாமல் தடுக்க 49 வருவாய் கிராமங்களுக்கு 144 உத்தரவு பிறப்பித்த இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 

ponnamaravathi



18 ந் தேதி இரவு பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஒரு சமூக மக்கள், மதியம் நாங்கள் கொடுத்த புகாருக்கு எடுத்த நடவடிக்கை என்று என்று ஆடியோ விவகாரம் குறித்து கேட்ட நிலையில் போலிசாரின் பதில் திருப்தி இல்லை என்று நள்ளிரவு வரை காவல் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

மறுநாள் 19 ந் தேதி காலை முதல் பொன்னமராவதி செல்லும் அனைத்து வழித்தடங்களும் மக்கள் போராட்டங்களால் முடக்கப்பட்டது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முற்றுகையிடப்பட்டதால் 800 போலிசார் குவிக்கப்பட்டனர், கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்ட நிலையில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் வாகனங்கள் சேதமடைந்தது, மேலும் போலிசார், பொதுமக்கள் உள்பட பலர் காயமடைந்தனர், இதனால் பதற்றம் அதிகரித்தது. இந்த சம்பவம் ஊருக்குள் பரவியதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டது. 
 

பொன்னமராவதியில் மேலும் கலவரம் ஏற்பட்டுவிடாமல் தடுக்க திருச்சி சரக ஐ.ஜி, டி.ஐ.ஜி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, எஸ்.பி. செல்வராஜ், இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் மற்றும் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்திய பிறகு கோட்டாட்சியர் சிவதாஸ் பொன்னமராவதி தாலுகாவில் உள்ள 49 வருவாய் கிராமங்களுக்கு 19 ந் தேதி மாலை முதல் 21 ந் தேதி மதியம் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார். 

 

ponnamaravathi


அதனால் அந்த பகுதியில் பதற்றம் குறைந்து அடுத்த நாட்களில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியது. 22 ந் தேதி முதல் முழுமையாக கடைகள் திறக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் இயங்கியது. பாதுகாப்புக்காக போலிசார் ஆங்காங்கே தங்கியுள்ளனர். 
 

இந்த நிலையில் மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர 144 உத்தரவிட்ட இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாசை தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிவிட்டு, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் இருந்து கீதா என்பவரை இலுப்பூர் கோட்டாட்சியராக நியமித்துள்ளனர்.
 

இந்த உத்தரவை பார்த்து வருவாய் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்கள் கூறும்போது... பொன்னமராவதியில் பிரச்சனை அதிகமான நிலையில் கலவரம் வெடித்துவிடக் கூடாது என்பதற்காக மேல் அதிகாரிகளின் ஆலோசனைப்படியும் வாய்மொழி உத்தரவுப்படியும் தாசில்தார் அறிக்கைப்படியும் 144 உத்தரவை ஆர்.டி.ஓ போட்டார். அந்த உத்தரவால் பெரும் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கலவரத்தை தடுத்து நிறுத்த காரணமாக இருந்த கோட்டாட்சியரை தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி இருப்பது வேதனை அளிக்கிறது என்றனர்.