கடந்த வாரம் கடைசி நேர தேர்தல் பரப்புரையோடு பரபரப்பாக வெளிவந்த ஒரு ஆடியோ தமிழ்நாட்டையே போராட்டக்களமாக்கி வைத்திருக்கிறது. ஆனால் 8 நாட்கள் கடந்தும் அந்த ஆடியோ வெளியிட்ட நபரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழ்நாடு காவல் துறை திண்டாடி வருவதுடன் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தஞ்சை பாராளுமன்றத் தொகுதியை குறிவைத்து பேசப்பட்ட அந்த ஆடியோவில் சுயேட்டை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவர் சார்ந்துள்ள முத்தரையர் இன பெண்களை மிகவும் தரம் தாழ்ந்து இழிவாக பேசியுள்ளனர் அந்த ஆடியோவில். அந்த ஆடியோ பதிவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று தான் மக்கள் போராட்டக் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் அனைத்து செல்போன்களிலும் இந்த ஆடியோ வைரலாக பரவிவந்த நிலையில் முதலில் பதிவிட்ட நபர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் வாட்ஸ் அப் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர் போலிசார்.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் அந்த ஆடியோவை பரப்பும் நபர்களையும், அந்த ஆடியோ சம்மந்தமாக வேறு வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பதில் இறங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் திருச்சிற்றபலம் காவல் நிலையத்தில் அய்யாச்சாமி என்பவர் கொடுத்த புகாரில் அய்யாச்சாமி பெயரையும் படத்தையும் தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே போல பலரிடம் விசாரணைநடந்து வருகிறது.
இந்த நிலையில் தான் பொன்னமராவதி போராட்டம் தீவிரமடைந்திருந்த நேரத்தில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள ராசியங்காடு கிராமத்தைச் சேர்ந்த மதன் சுந்தர் என்ற இளைஞரை அழைத்து வந்து விசாரணைசெய்தனர். சம்மந்தப்பட்ட ஆடியோவை பதிவிட்டது பற்றியும், பகிர்ந்தது பற்றியும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட போலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணைசெய்தனர். அவரது செல்போனும் சோதிக்கப்பட்ட நிலையில் விசாரனை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தான் தன் சொந்த இன பெண்களையே இழிவாக பேசிய ஆடியோ வெளியிட்டவன் ராசியங்காடு சுந்தர் மற்றும் அவரது தம்பியும் தான் என்றும் சொந்த இன பெண்களை இப்படி கேவலமாக பேச எப்படி மனம் வந்தது என்று யாரோ இருவர் படத்துடன் ஒரு சில பதிவுகள் வேகமாக சமூக வலைதளங்களில் பரவியது. அதனால் போராடும் மக்களின் இனத்துக்காரர்களே ஆடியோ வெளியிட்டதாகவும் போலிசார் கைது செய்துள்ளனர் என்ற தகவல்களும் பரவியது.
ஆனால் இந்த ஆடியோ வெளியிட்டதில் சமூக வலைதளங்களில் முதல் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட ராசியங்காடு சுந்தர் அவர் வீட்டில் இருந்தார். அவர் வீட்டில் இருக்கும் தகவல் அறிந்து அவரிடம் தொலைபேசியில் கேட்ட போது அவர் கூறியதாவது..
நான் சார்ந்துள்ள முத்தரையர் இன பெண்களை இழிவாக பேசிய ஆடியோவை கேட்ட போது ரொம்பவே மன வேதனை அடைந்தேன். அந்த நிலையில் தான் யாரோ தூண்டுதலில் நான் அந்த ஆடியோவை வெளியிட்டிருப்பேன் என்று என்னை பட்டுக்கோட்டை போலிசார் அழைத்தனர். நான் செல்ல தாமதம் ஏற்பட்டதால் போலிசார் வந்து என்னை அழைத்துச் சென்றனர்.
அங்கு புதுக்கோட்டை மற்றம் தஞ்சை மாவட்ட போலிசார் என்னிடம் அந்த ஆடியோவை வெளியிட்டியா? வந்த ஆடியோவை பரப்பினாயா? என்று கேட்டார்கள். அந்த ஆடியோவை நான் பதிவு செய்யவில்லை என்பதை அழுத்தமாக சொன்னதுடன் என் செல்போனையும் அவர்களிடம் கொடுத்தேன். ஆய்வு செய்தார்கள். பிறகு விசாரனை முடிந்து என்னை அனுப்பி விட்டார்கள். ஒரு நாள் தான் விசாரணைக்காக சென்றேன். அதன் பிறகு எனது உறவினர் வேலையாக வெளியூர் சென்றுவிட்டேன்.
அந்த நேரத்தில் நான் தான் அந்த ஆடியோவை பதிவு செய்தவன் என்று சமூக ஊடகங்களில் என்னை தவறாக சித்தரித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அந்த தவறான பதிவுகளை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளும் எங்களைப் பற்றி தவறாக பேசுகிறார்கள். இதனால் ரொம்ப வேதனையடைந்துள்ள நான் என்னைப் பற்றி தவறாக பதிவு செய்தவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு தொடரும் எண்ணத்தில் இருக்கிறேன். செய்யாத தவறுக்காக நான் அவமானப்பட்டு நிற்கிறேன் என்றார்.
சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்டதாக சித்தரிக்கப்பட்ட ராசியங்காடு சுந்தரும் விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் உண்மையாக ஆடியோ வெளியிட்டது யார்? சுந்தர் விசாரனைக்கு வந்ததால் அவரை குற்றவாளியாக சித்தரித்து வதந்தி பரப்பியவர்கள் மீது போலிசார் எடுக்கும் நடவடிக்கை என்ன என்ற பல கேள்விகள் பலமாக எழுந்துள்ளது.
எல்லாவற்றுக்கும் கலிபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனம் கொடுக்கும் பதிலில் தான் விடை கிடைக்கும். அந்த பதில் எப்போது வரும் என்பது மற்றொரு கேள்வியாக உள்ளது.