Pongal token distribution; Government of Tamil Nadu issued notifications

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் திருவிழாவிற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த பொங்கல் (2024) பரிசு தொகுப்பாகத் தமிழக அரசு சார்பில், குடும்ப அட்டைத் தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கம் ஆகியவை இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு பரிசு தொகுப்பினை வழங்கிடும் வகையில் டோக்கனில் தேதியை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் முற்பகல் 100 பேருக்கும் பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் வழங்க வழங்கவும், இரண்டாம் நாள் முதல் முற்பகல் 200 பேருக்கும் பிற்பகலில் 200 பேருக்கும் டோக்கன் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் கடைகளில் போலீசார் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என அறிவுறுத்தல்களை தமிழக அரசு கொடுத்துள்ளது.