Advertisment

"திட்டமிட்டபடி பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்"- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

publive-image

Advertisment

திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் முதன்மைச் செயலாளர் இன்று (10/01/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், 2022- ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து, கடந்த டிசம்பர் மாதம் 20- ஆம் தேதி அன்று தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, தற்பொழுது அரசு அறிவுறுத்தியுள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை (11/01/2022) முதல் ஜனவரி 13- ஆம் தேதி வரையில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும்.

Advertisment

publive-image

சென்னையில் இருந்து பின்வரும் பேருந்து நிலையங்களில் இருந்து ஜனவரி 11- ஆம் தேதி முதல் ஜனவரி 13- ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து ECR வழியாக, புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

publive-image

தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, சிதம்பரம், கடலூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேட்டில் இருந்து, மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

publive-image

முன்பதிவு செய்துக் கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

koyambedu PONGAL FESTIVAL special bus
இதையும் படியுங்கள்
Subscribe