Skip to main content

“பொங்கல் பரிசுத்தொகுப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும்” - ராமதாஸ் 

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
“Pongal prize package should be announced immediately” - Ramadoss

“ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறக்கவிருக்கும் நிலையில், அடுத்த இரு வாரங்களில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பு குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த  அறிவிப்பும் வெளியாகவில்லை. போதிய வாழ்வாதாரம் இல்லாமல் அரசின் உதவியை நம்பியிருக்கும் மக்களுக்கும், கரும்பு சாகுபடி செய்துள்ள உழவர்களுக்கும் அரசின் தாமதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது” என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறக்கவிருக்கும் நிலையில், அடுத்த இரு வாரங்களில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பு குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த  அறிவிப்பும் வெளியாகவில்லை. போதிய வாழ்வாதாரம் இல்லாமல் அரசின் உதவியை நம்பியிருக்கும் மக்களுக்கும், கரும்பு சாகுபடி செய்துள்ள உழவர்களுக்கும் அரசின் தாமதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வசதியாக, கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு பொங்கல் திருநாளுக்கும் அரிசி வாங்குவதற்கான குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும். ஏழை மக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்றாலும், பொங்கலுக்கு படைக்கப் பயன்படும் செங்கரும்பை சாகுபடி செய்யும்  உழவர்களுக்கு நல்ல விலை கொடுத்து அதை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதும் காரணமாகும்.

பொங்கல் திருநாளுக்கு ஒரு மாதம் முன்பாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். ஜனவரி முதல் வாரத்தில் பரிசுத் தொகுப்பை வழங்கும் பணி தொடங்கி விடும்.  கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் நாள் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி 2 ஆம் நாள் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் புத்தாண்டு பிறக்கவிருக்கும் நிலையில் பரிசுத் தொகுப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு முதலில் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. அதைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் உழவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது. அப்போதும் கூட செங்கரும்பு கொள்முதலுக்கு நடைமுறைக்கு சாத்தியமற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், உழவர்கள் தாங்கள் விளைவித்த கரும்புகளை முழுமையாக விற்பனை செய்ய முடியாமல் பெரும் இழப்புக்கு ஆளாயினர்.

நடப்பாண்டில் பொங்கலுக்கு இன்னும் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்படாததால், பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் கைவிடப்பட்டு விடுமோ? என்ற அச்சமும், கவலையும் உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பை நம்பித் தான் பொங்கல் கரும்பை சாகுபடி செய்கின்றனர். நடப்பாண்டில் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், தருமபுரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமாக பொங்கல் சந்தைக்கு தேவைப்படும் கரும்பை விட இரு மடங்குக்கும் கூடுதல் ஆகும்.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை என்றால், விளைவிக்கப்பட்ட  கரும்புகளில் சந்தையின் தேவைக்கு போக மீதமுள்ளதை எதற்கும் பயன்படுத்த முடியாது. பொங்கலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும். அந்த விலைக்கு விற்றால் உற்பத்திச் செலவைக் கூட உழவர்களால் ஈடு செய்ய முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதை தமிழ்நாட்டு உழவர்களால் தாங்க முடியாது.

எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயரம் தொடர்பாக  எந்த நிபந்தனையும் விதிக்காமல் முழுக் கரும்பு என்ற அடிப்படையில், தமிழ்நாட்டு உழவர்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு கரும்புக்கு ரூ.50 வீதம் விலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.