Advertisment

பொங்கல் பரிசு தொகுப்பு: பெண்களின் மனநிலை என்ன? 

Pongal Gift Collection! What is the mood of women?

மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் கவனம் செலுத்திவரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிவருகிறது. இந்த பரிசுத் தொகுப்பினை வாங்கிச் செல்லும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். குறிப்பாக, பெண்களிடம் உற்சாகம் அதிகரித்துவருகிறது.

Advertisment

பொங்கல் பண்டிகையைத்தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பயிறு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகம், கடுகு, புளி, மிளகு, கோதுமை மாவு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, ரவை, உப்பு, கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை கடந்த 4ம் தேதி துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

Advertisment

தமிழகம் முழுவதுமுள்ள 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்காக 1,267 கோடி ரூபாய் செலவில் இந்தப் பொங்கல் பரிசு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் ஒரு நாளைக்கு 200 நபர்களுக்கு மட்டுமே பரிசு தொகுப்பு பைகள் விநியோகிக்கப்படுவதால் இதுவரை 50 சதவீத மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன.

பொங்கல் பரிசு பொருட்களை வாங்கிச் செல்லும் பெண்களிடம் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய பல்வேறு இடங்களில் வலம் வந்தோம். சென்னை ராயபுரம் மீனவ பெண்களிடம் நாம் பேச்சு கொடுத்தபோது, நம்மிடம் பேசிய மகாலெட்சுமி, “இதுவரை எந்த அரசும் இத்தனை பொருட்களைப் பொங்கல் பரிசாக கொடுத்ததில்லை. அதுவும் அத்தனை பொருட்களும் தரமாக இருந்தன. பொங்கல் பரிசு தொகுப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருப்பாரு. அதனாலதான் தரமான பொருட்களை தந்திருக்காங்க” என்றார்.

திருவெற்றியூர் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் பெண்களிடம் பொங்கல் பரிசு எப்படி இருக்கிறது எனக் கேட்டபோது, “பரிசு தொகுப்பிலுள்ள பொருட்கள் 1 வாரத்துக்கு பயன்படுத்த முடியும். அந்தளவுக்கு பொங்கல் பண்டிகைக்குத் தாராளமாகப் பயன்படுத்தியது போக மிச்சமிருக்கும் வகையில் பொருட்களை தந்திருக்கிறது திமுக அரசு. பொருட்களை பிரித்துப் பார்த்தோம். சுத்தமாகவும் தரமாகவும் இருந்தன. அதுவே எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது” என்று சுந்தரி, ராமாயி, செல்லம்மாள், ராஜஸ்வரி ஆகியோர் உற்சாகமாகத் தெரிவித்தனர்.

பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் குடியிருப்புவாசிகளிடம் நாம் விசாரித்தபோது, “மக்களின் மனசறிந்து நல்ல பொருட்களாக கொடுத்திருக்கிறாரு முதலமைச்சர் ஸ்டாலின். ஏழைகளின் மீது அவருக்குரிய கரிசனம் இந்தப் பொங்கல் பரிசில் நாங்கள் பார்த்தோம். ஏன்னா, பொங்கல் பரிசு இந்த வருசம் கிடைக்கும்னு நாங்க நினைக்கலைங்க. அப்படியிருக்கும் போது 21 பொருட்களைப் பொங்கல் பரிசா கொடுத்திருக்காருன்னா ஏழைகள் மீது அக்கறை இருப்பதால்தான். அதிமுக ஆட்சியில பொருளும் கொடுத்து பணமும் கொடுத்தாங்க. அதுவும் நாலஞ்சு பொருள்தான் இருந்தது. பொருளும் மோசமாக இருந்தது. பணம் கொடுத்ததால பொருளின் தரத்தைப் பத்தி யாரும் கவலைப்படலைங்க. பணம் மட்டும் கொடுக்கலைன்னா அதிமுக அரசு கொடுத்த பொருட்களை எல்லாம் தூக்கி வீசியிருப்பாங்க. மக்களின் கண்களை பணம் மறைச்சிருச்சி.

ஆனா, இப்போ திமுக ஆட்சியில பணம் கொடுக்கலைன்னாலும் பொருட்களின் எண்ணிக்கை பை நிறைய இருந்ததோட எல்லா பொருட்களும் தரமாக இருக்கின்றன. ஒவ்வொரு பொருளாக எடுத்து சோதிச்சிப் பார்த்தோம். எதுவும் குறை சொல்ல முடியலை. எல்லாமுமே சுத்தமாகவும் தரமாகவும் இருந்தன. அதுவே மனசுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது” என்று தங்களின் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டனர் பெண்கள்.

சென்னையில் பல இடங்களுக்கு சென்று பெண்களிடம் பேசியதில் இது போன்ற உற்சாகமே எதிரொலித்தது. சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும்பெண்களிடம் இத்தகைய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு என்கிற தகவல்களே வருகின்றன.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe