ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை உயர்வு!

Pongal gift amount increased for pensioners

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் திருவிழாவிற்காக குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் சில சமயங்களில் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம். அதே சமயம் தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ள அரசாணையில், “கடந்த 02.01.2010 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை 300 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிட ஆணை வழங்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28.04.2025 நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110இன் ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதில் ‘தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்குத் தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும்.

இந்த பரிசுத் தொகை உயர்வால் சுமார் நான்கு இலட்சத்து எழுபத்து ஓராயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கிணங்க, முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்குப் பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கி அரசு ஆணையிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mk stalin pension pongal gift tn govt pongal 2026
இதையும் படியுங்கள்
Subscribe