
பொங்கல் திருநாளான ஜனவரி 14- ஆம் தேதி அன்று பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி ஆகிய இரு தலைவர்களும் தமிழகம் வருகின்றனர்.
ஜனவரி 14- ஆம் தேதி அன்று சென்னை வரும் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, 'துக்ளக்' இதழின் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். மேலும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் ஜெ.பி.நட்டா ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., ஜனவரி 14- ஆம் தேதி அன்று மதுரைக்கு வருகிறார். அதைத் தொடர்ந்து, அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் பார்க்கவுள்ளார். மேலும், தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கானப் பிரச்சாரத்தை ராகுல்காந்தி ஜனவரி 23- ஆம் தேதி அன்று கொங்கு மண்டலத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேசியக் கட்சிகளின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.