Skip to main content

சமத்துவப் பொங்கல் விழா; தமிழி எழுத்தில் வாழ்த்துக் கோலம் போட்டு அசத்திய மாணவிகள்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

Pongal festival greeting card  Tamizhi words written students

 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் இ. சண்முகநாதன் தலைமை தாங்கினார். வகுப்பறைகளை சுத்தம் செய்து பள்ளி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு அனைத்து வகுப்புகள் முன்பும் கோலங்கள் போடப்பட்டன.

 

பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் பழமையான தமிழி எழுத்துகளை எழுதப் படிக்கத் தெரிந்துள்ள எட்டாம் வகுப்பு மாணவிகள் தீபிகாஸ்ரீ, பார்னியாஸ்ரீ, வித்யா ஆகியோர் தலைமையிலான குழுவினர், வகுப்புக்கு முன்பு பொங்கல் பானை, கரும்பு கோலத்துடன் பழமையான தமிழி மற்றும் தமிழ் எழுத்துக்களில் 'இனிய பொங்கல் வாழ்த்து' என எழுதியிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர். 

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்து கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில்  மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத்  தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.