ADVERTISEMENT

மாடுகளுக்கு பூ தாண்டும் போட்டி; களைகட்டிய காணும்பொங்கல்

10:35 AM Jan 19, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல் அருகே காணும்பொங்கலன்று நடந்த காளை மாடுகளுக்கு பூ தாண்டும் போட்டி கிராம மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. போகியில் தொடங்கும் பொங்கல் பண்டிகை சூரியப்பொங்கல், மாட்டுப்பொங்கல் எனத் தொடர்ந்து காணும்பொங்கலுடன் நான்கு நாள் விழாவாக நிறைவு பெறுகிறது. கடைசி நாளான காணும்பொங்கலன்று ஜல்லிக்கட்டு, எருதாட்டம், நரி ஜல்லிக்கட்டு, பானை உடைத்தல், உறியடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் என ஒவ்வொரு ஊரிலும் விழாக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் களைகட்டும்.

அவ்வாறாக நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பெரியநாயக்கனூர் கிராமத்தில் வித்தியாசமாக ஜனவரி 17ம் தேதி காணும்பொங்கலன்று காளை மாடுகளுக்கு பூ தாண்டும் போட்டி நடத்தியுள்ளனர். ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள் கிராம மக்கள். தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இதற்கான விழா ஏற்பாடுகளை காலங்காலமாக செய்து வருகின்றனர். இந்தப் போட்டிக்காக சுற்றுப்பட்டில் உள்ள வேப்பமரத்தூர், அப்பநாயக்கனூர், காளிநாயக்கனூர் கிராமங்களில் இருந்து 3 காளை மாடுகளை அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தனர்.

பெரியநாயக்கனூர் கோயில் அருகே உள்ள மைதானத்தில் போட்டிக்கான களம் தயார் செய்யப்பட்டது. சாமந்தி பூக்களால் நீளமான கோட்டைப் போடுகின்றனர். போட்டியில் பங்கேற்கும் காளைகளை அக்கோட்டிற்கு சுமார் 150 அடி தொலைவில் இருந்து அவிழ்த்து விடுகின்றனர். அவற்றில் எந்த மாடு பூக்களால் ஆன எல்லைக்கோட்டை முதலில் தாண்டுகிறதோ அது வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் உள்ளூர் கோயிலால் பராமரிக்கப்பட்டு வரும் காளை மாடும் கலந்துகொள்ளும். சாமி மாட்டுக்கு மட்டும் கொம்புகளில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்து வழிபடுகின்றனர். காளை மாடுகள் பூ தாண்டும் போட்டி உள்ளூர் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT