Skip to main content

“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Pondycherry youngster passes away due to online game


புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோர்க்காடு எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (36). இவருக்கு மதுமிதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் தனியார் சிம் கார்டு கம்பெனியில் மொத்த விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கரோனா காலத்தில் வேலை இல்லாததால் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி வந்துள்ளார். ஆரம்பத்தில் இதில் பணம் சம்பாதித்துள்ளார். பிறகு அடுத்தடுத்து விளையாடும்போது பணத்தை இழந்துள்ளார். நாளடைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தன்னிடம் இருந்த மொத்தப் பணத்தையும் இழந்ததுடன், மேற்கொண்டு நண்பர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரிடமும் ரூபாய் 25 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி எல்லாவற்றையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். 

 

அதனையடுத்து, கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டுள்ளனர். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமலும், கொடுத்த கடன் கொடுத்தவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த விஜயகுமார், ஒரு கட்டத்தில் மன விரக்தியடைந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் தனது மனைவியின் செல்ஃபோனுக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், 'எனது பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்' என்றும், 'எனது செல்ஃபோனை வண்டியில் வைத்துள்ளேன்' என்றும் கூறியுள்ளார். மேலும் "ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும்" என்றும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.  இதனால் பதறிப்போன அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் விஜயகுமாரை தேடினார்கள். அவர் கிடைக்காததால் நேற்று காலை மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 
இந்த நிலையில், நேற்று காலை கோர்க்காடு அருகே புதுக்குப்பம் செல்லும் சாலையில் உள்ள ஏரிக்கரையில், ஒருவர் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடப்பதாக, மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் சரண்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்-லைன் சூதாட்டத்தால் வாலிபர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு! 

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
Online Booking for Jallikattu Tournaments

ஜனவரி மாதம் பொங்கல் வரவிருக்கும் நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றவை ஆகும்.

இந்நிலையில் வரும் ஜனவரியில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சங்கீதா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறும் எனவும்,  போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் நடைபெறும் எனவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.