ADVERTISEMENT

சபாநாயகர் பதவி சர்ச்சை; விரக்தியில் மூத்த எம்.எல்.ஏ!

09:38 AM Jun 08, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மக்களவை தேர்தல் முடிந்த கையோடு சட்டசபை சபாநாயகர் தேர்தலையும் நடத்தியதால் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளது புதுச்சேரியில்.

ADVERTISEMENT


புதுச்சேரி சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் எம்.பியானதை அடுத்து, காலியான சபாநாயகர் பதவியை துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, உழவர்கரை காங்கிரஸ் எம்.எல்.ஏ எம்.என்.ஆர்.பாலன், முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லஷ்மி நாராயணன் எம்.எல்.ஏ ஆகியோர் எதிர்பார்த்தனர். கூட்டணி கட்சியான தி.மு.கவும் சபாநாயகர் பதவிக்கு குறி வைத்தது. என்.ஆர்.பாலனுக்காக அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தனவேல், தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோர் அடம் பிடித்தனர். அதேசமயம் என்.ஆர்.பாலனை சபாநாயகர் பதவிக்கு களமிறக்கி ஆட்சி மாற்றத்துக்கு அடி போட முயற்சித்தன எதிர்க்கட்சிகள். அதற்காக என்.ஆர்.பாலன் தரப்புக்கு ஒரு ‘சி’ வரை பேரம் நடந்ததாம்.

சபாநாயகர் போட்டிக்கான கடைசி நேரமான ஜூன் 2-ஆம் தேதி 12 மணி வரை பாலன் மனுதாக்கல் செய்வார் என தனியார் ஹோட்டலில் தவமிருந்தனர் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், பா.ஜ.க எம்.எல்.ஏ சுவாமிநாதன் ஆகியோர். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்ய விரும்பாத என்.ஆர்.பாலன் களமிறங்க தயங்கினார். ‘தனக்கு வயதாகிவிட்டது. இந்த முறை மட்டும் வாய்ப்பு தாருங்கள்’ என துணை சபாநாயகர் சிவக்கொழுந்து என்.ஆர்.பாலன், முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோரிடம் முறையிட என்.ஆர்.பாலன் துணை சபாநாயகர் பதவிக்கு ஒப்புக்கொண்டார். சிவக்கொழுந்து மட்டுமே சபாநாயகர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கலுக்கான நேரமும் முடிந்ததென அறிவிக்கப்பட்டது. ஆனால் என்.ஆர்.பாலன் கடைசி வரை மனுதாக்கல் செய்யாததால் ஏமாற்றமடைந்த எதிர்க்கட்சிகளோ ‘உரிய கால அவகாசம் கொடுக்காமல் சபாநாயகர் தேர்தலை நடத்துவதாக கூறி சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்ததுடன், ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் மனு அளித்தனர்.

மெஜாரிட்டி பலம் இருந்ததால் அடுத்த நாள் சபாநாயகர் தேர்தலுக்கான சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ் - தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் சட்டப்பேரவைத் தலைவராக சிவக்கொழுந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக அவர் அறிவித்தார்.

அதேசமயம் லஷ்மி நாராயணன் தனக்கு சபாநாயகர் பதவி தரவில்லை என்பதால் சட்டமன்ற நடவடிக்கையை புறக்கணித்து, சட்டப்பேரவையில் உள்ள பாராளுமன்ற அலுவலகம் மற்றும் தனக்கு வழங்கப்பட்ட அரசு காரின் சாவிகளை சட்டப்பேரவை செயலரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினார். அவரது ஆதரவாளர்களோ சட்டப்பேரவை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். முதல்வர் நாராயணசாமியுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் ராஜ்பவன் காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினமா செய்வதாக கடிதங்கள் கொடுத்தனர். 2016 அமைச்சரவையில் லஷ்மி நாராயணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாத போதும் இப்படித்தான் அவரது ஆதரவாளர்கள் திரண்டு, ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதாக கூறி பிரச்னையில் ஈடுபட்டனர். அப்போதும் அவர்கள் சமாதானம் செய்யப்பட்டு, லஷ்மி நாராயணனுக்கு முதல்வரின் பாராளுமன்ற செயலர் பதவி வழங்கப்பட்டது.

லஷ்மி நாராயணன் இருமுறை அமைச்சராக இருந்தவர் என்பதாலும், தற்போதைய அமைச்சரவையில் அவர் சேர்க்கப்படாததாலும் சபாநாயகர் பதவி அவருக்கு கிடைக்கும் என கூறப்பட்டது. லஷ்மி நாராயணனும், அவரது ஆதரவாளர்களும் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சிவக்கொழுந்து சபாநாயகராக்கப்பட்டதால் வருத்தத்திற்கு உள்ளான லஷ்மி நாராயணன் பாராளுமன்ற செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவரை தற்காலிமாக சமாதானம் செய்த நாராயணசாமி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் வாரிய தலைவராக நியமிக்கலாம் என்கிற யோசனையை கூறி லஷ்மியை சைலன்ட் ஆக்கி வைத்துள்ளாராம். அப்படி பதவி கிடைக்கும் வரை பட்டும் படாமல்தான் இருப்பார் லஷ்மி என்கின்றனர் காங்கிரஸார்.

அதேசமயம் ஆளுநருக்கான அதிகாரம், பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் போன்ற வழக்குகளில் மத்திய உள்துறை அமைச்சகத்தை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்து நடத்தி வந்தார் லஷ்மி நாராயணன். அதில் கிரண்பேடிக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தீர்ப்பு கிடைத்தது. தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் கிரண்பேடிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மீது உள்ள அதிருப்தியால் லஷ்மிநாராயணன் இந்த வழக்குகளில் தீவிரம் காட்டுவாரா… என்பது கேள்விக்குறி?

இதுகுறித்து லஷ்மி நாராணனிடம் கேட்டதற்கு, “ காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்த விவகாரங்கள் என்பதால் வழக்கு போட்டிருந்தேன். வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டது. வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள். முதல்வரோ, வேறு யார் வேண்டுமானாலும் நடத்தலாம். அந்த வழக்கிற்காக நான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒரு பக்கம் கிடுக்கிப்பிடி போட, மற்றொரு பக்கம் சொந்த கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் சமாளித்து ஆட்சியை நகர்த்துவது பெரும்பாடாகத்தான் இருக்கிறது முதல்வர் நாராயணசாமிக்கு.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT