Skip to main content

புதுச்சேரியில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை; மீறினால் 1 லட்சம் அபராதம் என முதலமைச்சர் எச்சரிக்கை! 

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

 

தமிழகத்தில் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியிலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள்  கோரிக்கை விடுத்து வந்தன.  அரசும் இதை ஏற்று தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் நடைமுறைப்படுத்தாமல் அமல்படுத்துவதற்கான தேதியை உறுதி செய்யாமல் இருந்து வந்தது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்படாததால் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருந்து வந்தன.

 

n

 

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் கந்தசாமி தலைமையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.  அப்போது ஒரு சில பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் (இன்று) பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்திருந்தார். அதையடுத்து இந்த தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

 

இதுகுறித்து புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ புதுச்சேரி அரசு புதுவை யூனியன் பிரதேசத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க உத்தேசித்து பொதுமக்களின் கருத்துகளை பெற அதன் வரைவு அறிக்கை கடந்த 8.2.2019 அன்று அரசு சார்பில் வெளியிட்டது. அதன்படி சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் தலைமையில் பிளாஸ்டிக் வர்த்தகர் சங்கம், ஜவுளி சங்கம் மற்றும் உணவு விடுதி சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 

 

கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில்  10 வகையான ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தயாரித்தல், எடுத்துச் செல்வது, விற்பனை செய்வது, சேகரித்து வைத்தல் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலித்தீன், பிளாஸ்டிக், பாலிப்ரொப்பலீன் தூக்குப் பைகள் (கேரி பேக்குகள்), பாலித்தீன், பிளாஸ்டிக் குவளைகள், பாலித்தீன், பிளாஸ்டிக் தட்டுகள், தெர்மாக்கோல் குவளைகள், தெர்மாக்கோல் தட்டுகள், உணவு பொருட்களை கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் ஒட்டும்தாள், உணவு அருந்தும் மேஜையின் மேல் விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், நீர் நிரப்ப பயன்படும் பைகள் (தண்ணீர் பாக்கெட்டுகள்), பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்டிரா), பிளாஸ்டிக் கொடி போன்றவை தடை செய்யப்படுகிறது.  இந்த தடை ஆணையை மீறுபவர்கள் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதியின்படி தண்டிக்கப்படுவார்கள்’ என் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  நேற்று சட்டசபை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. மனிதர்களுக்கு நோய் உருவாகும் நிலை உள்ளது என்பதால் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தடை ஆணையை மாசு கட்டுப்பாட்டு கழகம், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், வருவாய் துறை தாசில்தார், உணவு ஆய்வாளர்கள் நடைமுறைப்படுத்துவார்கள். மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 

தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக 8 வகையான பொருட்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை ஆணையை மீறுபவர்கள் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். ரூ 5,000 முதல் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

"தமிழக கலாச்சாரம் ஒரு ஆன்மீக கலாச்சாரம்" - ஆளுநர் தமிழிசை

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

governor tamilisai talks about tamilnadu culture spiritual culture

 

வேலூர் நாராயணி தங்க கோவில் வளாகத்தில் 31 ஆம் ஆண்டு விழா இன்று (08.05.2023) நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க 10008 மஞ்சள் குட நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "ஆன்மீகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது. இந்த இரண்டும் தான் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் சிலர் ஆன்மீகத்தை தவிர்த்து தமிழ் தான் அனைத்திற்கும் என்று சமீப காலமாக கூறி வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல. கொரோனா காலத்தில் தடுப்பூசி போடுவதற்கு அந்த அளவிற்கு நாங்கள் முயற்சி செய்தோம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உலக சுகாதார நிறுவனம் கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு நமது ஆன்மீகமும் அறிவியலும் காரணமாகும்.

 

இந்தியா எடுத்த உறுதியான முடிவினால் 45 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். இதற்கு தடுப்பூசியும் இறைவனின் அருளும்தான் காரணமாகும். இவை இரண்டும் சேர்ந்தால் தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை காண முடியும். அதை நான் முழுமையாக நம்புகிறேன். ஆன்மீகமும் தமிழும் ஒன்றுதான். ஆன்மீகத்தோடு கூடிய தமிழ் தான் தமிழகத்திற்கு வளர்ச்சியை தரும். தமிழக கலாச்சாரம் ஒரு ஆன்மீக கலாச்சாரம். தமிழக முதல்வர் இந்துக்களின்  விநாயகர் சதுர்த்தி, தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. ஆனால் நான் பாகுபாடு பார்ப்பவன் இல்லை என முதல்வர் சொல்கிறார். ஆனால் இவர் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதது குறித்து நான் கேட்டிருந்தேன். இதுவரையில் எனக்கு பதில் இல்லை.

 

ஆளுநர்கள் குறித்து தவறான கருத்துகளை கூறுகிறார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அதிகாரங்கள் உள்ளது. அதே போல் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் சில அதிகாரங்கள் அவர்களுக்கு உள்ளது. ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஏன் ஆளுநரை சந்தித்தார்கள். எல்லோரையும் மரியாதையுடன் பேச வேண்டும். ஆளுநர்களுக்கு அதிகாரமில்லை என புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் கூறி வருகிறார். அதே போல் நான் புதுவையில் அதிக நாள் தங்கியிருப்பதாக நாராயணசாமி கூறுகிறார்.

 

உண்டியல் குலுக்கி புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் விமானம் ஏற்பாடு செய்வதாக கூறுகிறார். அவர் உண்டியல் குலுக்க தேவையில்லை சேர்த்து வைத்திருந்த பணத்திலேயே அவர் ஏற்பாடு செய்யலாம். பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மக்களும் ஹைதராபாத் மக்களும் வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமான சேவையை துவக்கி வைத்தார். உங்களைப் போல நாங்கள் தனி விமானத்தில் செல்லவில்லை. மக்களோடு மக்களாகத்தான் நாங்கள் செல்கிறோம். ஏற்கனவே புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் நேரடி விமான சேவை உள்ளது. இது கூட தெரியாமல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகிறார். புதுவையில் முதலமைச்சராக  நாராயணசாமி இருந்தபோது அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்று எங்களுக்கு தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே நாராயணசாமி ராஜ்யசபா எம்பி ஆக இருந்தார் என்பதும் எங்களுக்கு தெரியும். அதனால் எல்லோரையும் குறை சொல்ல வேண்டாம்" என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். 

 

 

Next Story

"நாட்டு மக்களின் ஜனநாயகம் காக்க தெருவில் இறங்கி போராடுவோம்" - நாராயணசாமி

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

puducherry narayanasamy talks about indian democracy 

 

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் புதுச்சேரியில் உள்ள பல்வேறு தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நெல்லித்தோப்பு தொகுதியில் நடைப்பயணம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

நடைப்பயணம் இந்திரா காந்தி சதுக்கம் அருகே வந்த போது ராகுல்காந்தியின் எம்.பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியலை தொடர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, " குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ஒருவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ராகுல் எம்.பிக்கு இரண்டு ஆண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராகுல் எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு  ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது நீரவ் மோடி, லலித் மோடி போன்றவர்கள் இந்தியாவில் உள்ள அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்துச் சென்றனர். அதற்கு நரேந்திர மோடி துணையாக இருக்கிறார் எனக் கூறியதற்கு மோடி சமுதாயத்தையே ராகுல் இழிவுபடுத்திவிட்டார் என வழக்கு போடப்பட்டுள்ளது.

 

இது ஒரு பொய் வழக்கு. மோடி சமுதாயத்தை தவறாகப் பேசவில்லை என்பது ராகுல் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சைக் கேட்கும் போது தெளிவாகத் தெரியும். இது பழிவாங்கும் நடவடிக்கை. 'அதானியை பணக்காரராக்கி பொதுத்துறை நிறுவனங்களை அவருக்கு வழங்கி உள்ளீர்கள். இது தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும்' என்று ராகுல் பார்லிமெண்ட்டில் கேள்வி எழுப்பினார். இப்படி ராகுல் கேள்வி எழுப்புவதை, பேசுவதை தடுக்க வேண்டும் என்பதற்கான திட்டமிடப்பட்ட சதி இது. இதனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திப்போம். நாட்டு மக்களின் ஜனநாயகம் காக்க தெருவில் இறங்கி போராடுவோம். இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.