Skip to main content

புதுச்சேரி அரசியல் கட்சியினர் டெல்லியில் நாளை ஆர்ப்பாட்டம்! 

Published on 03/01/2019 | Edited on 03/01/2019

 

p

 

தனி மாநில அந்தஸ்து,  கிரண்பேடியை திரும்பப்பெறல் உள்ளிட்ட கோரிக்கைளுக்காக புதுச்சேரி அரசியல் கட்சியினர் டெல்லியில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

 

நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது, மாநிலத்துக்கு போதுமான நிதியினை அளிக்காமல் வஞ்சிக்கிறது, மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிகார வரம்பு மீறுகிறார். எனவே புதுச்ச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் மாநில வளர்ச்சிக்கு  தடையாக கவர்னர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் புதுச்சேரி அரசியல் கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த  அனைத்து கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

 

p

 

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நாளை 4-ஆம் தேதி போராட்டம் நடத்த டெல்லி போலீசார் அனுமதியளித்துள்ளனர்.  போராட்டத்தில் பங்கேற்கும்படி ஆளும் காங்கிரஸின் தோழமை கட்சிகளான தி.மு.க,  விடுதலை சிறுத்தைகள், இ.கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் மற்றும் எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


அதன்படி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரசின் தோழமை கட்சிகளான தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் என 21 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று புதுச்சேரியில் இருந்து ரெயில் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம், தி.மு.க மாநில(தெற்கு) அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் ஆகிய கட்சி தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர். கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள்  விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர்.

 

மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டிக்கும் வகையில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதாகைகளை எடுத்து சென்றுள்ளனர். அதேசமயம் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க, பா.ம.க டெல்லி போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.  

 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும் என தொடர்ந்து சொல்லி வரும் என்.ஆர் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ளனர் என்பதை அறிய பொதுமக்கள் ஆவலுடன் உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்