
புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், 150-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும் உள்ளனர்.
சிறையில் உள்ள தண்டனை கைதிகள் பல்வேறு முறை பரோல்கேட்டு விண்ணப்பித்தும் கடந்த 4 மாதங்களாக பரோல் வழங்கவில்லை என கூறப்படுகின்றது.
அதையடுத்து பரோல் வழங்கப்படாததை கண்டித்தும், 3 மாதங்களுக்கு ஒரு முறை பரோல் வழங்ககோரியும் மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகள் கடந்த 5-ஆம் தேதி இரவு முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த தகவல் அறிந்த கைதிகளின் உறவினர்கள் நேற்று மத்திய சிறை முன்பு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனிடையே தொடர்ந்து சிறைக்குள் தண்டனை கைதிகள் 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 7 கைதிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் 5 பேருக்கு சிறையில் உள்ள மருத்துவப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கைதிகள் செல்வம், வடிவேல் ஆகிய இருவருக்கும் கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டனை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் விசாரணை கைதிகளும் நேற்று இணைந்து கொண்டதால் சிறை வார்டன்கள் உணவு தயாரித்து கொடுத்தும் கைதிகள் உணவை உட்கொள்ளாமல் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் சிறைத்துறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.