Skip to main content

புதுச்சேரி சுதந்திர தினவிழா -காரைக்காலில் கோலாகலமான கொண்டாட்டம்!

சுமார் அறுபது ஆண்டுகால நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 1ஆம் தேதியை புதுவை மாநில அரசு தங்களின் விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இன்று காரைக்காலிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

புதுச்சேரி சுதந்திர தினவிழாவிற்கு முன்பு, அதன் வரலாற்றை சற்று திரும்பி பார்போம்,

1673 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் காலூன்றியதும், அதே ஆண்டில் தங்களின் வனிகத்தை துவங்கிய இடம் புதுச்சேரிதான். அதன் பிறகு 1721 ம் ஆண்டு மாஹியையும், ஏனாமையும், காரைக்காலையும் சந்திரனாகூரையும், அடுத்தடுத்து தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். 

இந்தியா முழுவதும் பல்வேறு கோணங்களில் விடுதலைப் போராட்டங்கள் எழுந்து கிளர்ச்சியை உண்டாக்கியதால் 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு மட்டும் சுதந்திரம் அளித்தனர். ஆனால் புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று புதுச்சேரியிலும் போராட்டம் வெடித்தது. அந்தபோராட்டத்தில் புதுச்சேரி பொதுமக்களும்,  இந்திய போராட்ட வீரர்களும் கலந்துகொண்டனர். அந்த போராட்டம் மிக தீவிரமானதால் அப்போதைய இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு பிரெஞ்சு அரசாங்கத்திடம் புதுச்சேரியின் விடுதலை பற்றியும், இங்கு நடக்கும் போராட்டங்கள் குறித்தும் எடுத்துக்கூறினார். பிரெஞ்சு அரசாங்கமோ,"புதுச்சேரி மக்கள் விருப்பப்பட்டால் நாங்கள் வெளியேறுகிறோம்" என தெரிவித்தது.

அதன்பிறகு புதுச்சேரி மக்களின் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு நெட்டப்பாக்கம் அருகில் உள்ள கீழூர் என்கிற கிராமத்தை வாக்கெடுப்புக்கான இடத்தையும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் புதுச்சேரியில் சட்ட மன்ற உறுப்பினர்களோ, அதன்கீழ் உள்ள நிர்வாகமோ இல்லாததால், நிர்வாக வசதிக்காக கொம்யூன்களாக பிரிக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரமே இருந்தன.

ஒவ்வொரு கொம்யூன்களிலும் மக்களின் பிரதிநிதிகளாக ஒரு மேயர் எனவும் அவர்களுக்கு கீழ் கவுன்சிலர்கள் என்றும் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படியே 1954 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 18 ம் தேதி வாக்கெடுப்பு நடந்தது.

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் சந்திரனாகூர் ஆகிய பகுதிகளிலிருந்து மக்கள் பிரதிநிதிகளான 178 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். அந்த வாக்குப்பதிவில் புதுச்சேரி பிரதிநிதிகள் இந்தியாவுடன் சேர ஆதரவாக 170 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் பதிவாகின. இந்த முடிவுகளுக்கு பிறகு நவம்பர் 1ஆம் தேதி பிரெஞ்சிந்திய பகுதிகள் அனைத்தும் இந்தியாவுடன் அதிகாரபூர்வமாக இனைக்கப்பட்டது. இதில் சந்திரநாகூர் கல்கத்தா அருகில் இருப்பதால் அங்குள்ள மக்கள் நிர்வாக வசதிக்காக இவ்வளவு தூரம் வந்து செல்ல முடியாது என தாங்களை மேற்கு வந்ததோடு இணைந்து கொள்வதாக தெரிவித்தனர். 

புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்து விட்டதால் இந்தியாவின் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15ம் தேதிக்கு மறுநாள் 16-ம் தேதியை புதுச்சேரியின் சுதந்திர தினமாக புதுச்சேரி அரசு கொண்டாடி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் பல அறுபது ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தினர், தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக," நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாட அறிவிக்க வேண்டும்,"என்று கோரிக்கை வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பயனாக நவம்பர் 1-ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக அறிவித்து சுதந்திரத்தை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காரைக்கால் கடற்கரை சாலையில்  பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின விழா மிகவும் கோலாகலமாக துவங்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட புதுச்சேரியின் வேளாண்மைத் துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து சமாதானப் புறாக்களை பறக்கவிட்டார். தொடர்ந்து  விடுதலை நாள் பேருரையாற்றிய அமைச்சர் கமலக்கண்ணன், அரசின் திட்டங்கள் குறித்தும், நிர்வாகம் குறித்தும் சாதனைகள் குறித்தும் விரிவாக பேசினார். அதில் இனிவரும் காலங்களில் ஐ.ஏ.எஸ்; ஐ.பி.எஸ் அதிகாரிகளை உறுவாக்கும் பயிற்சி மையங்களை காரைக்காலில் துவங்கபடும் என அறிவித்தார்.


காரைக்கால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆடல்,பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு  அசத்தினர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்