கடந்த 1982ம் ஆண்டு தமிழக கோவிலில் இருந்து ஐம்பொன் நடராஜர் சிலை திருடப்பட்டது. இந்த சிலையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இதன்பின் பொன் மானிக்கவேல் தலைமையிலான குழு அந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பதை கண்டுபிடித்து, அதை மீட்டு இந்தியா கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிலை இன்று காலை சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன். மானிக்கவேல் கூறியது.
“சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசுக்கும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்சனை உள்ளது.
கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம். சிலைக்கடத்தல் வழக்குகளுக்கு எனது குழு மற்றும் ஊடகங்களும் உதவியாக இருந்தன. ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவி செய்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி.
நடராஜர் சிலை அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல. இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. நடராஜர் சிலையுடன் கடத்தப்பட்ட பழமையான தூண்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அனுமதி அளித்தால் எல்லா சிலைகளும் மீட்கப்படும்.
எங்களுக்கு அரசு நிதி அளிக்கவில்லை, அதனால்தான் டெல்லியிலிருந்து விமானத்தில் எடுத்துவரமுடியாமல் சிலையை ரயிலினின் மூலம் சென்னை எடுத்துவந்தோம். சொந்த ஒய்வூதியத்தில் சிலைகளை கண்டுபிடிக்கும் எனக்கு எந்த அகம்பாவமோ, ஆணவமோ இல்லை” என்று கூறியுள்ளார்.