Skip to main content

அமைச்சர் பெயரில் கல்லா கட்டும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி; வைரலாகும் பரபரப்பு ஆடியோ

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
Pollution control officer who gives money by saying the name of the minister
மணிமாறன்

சேலம் மாவட்டம் முழுவதும் சிறியதும் பெரியதுமாக 90 சாயப்பட்டறை ஆலைகள் (டையிங் யூனிட்)மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இவை தவிர, 200க்கும் மேற்பட்டசாயப்பட்டறைகள் சட்ட விரோதமாக செயல்படுகின்றன.இந்த பட்டறைகளில் துணி நூல்களுக்கு சாயமேற்றப்பட்ட பிறகு, அவற்றில் இருந்துசுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீரால் திருமணிமுத்தாறு உள்ளிட்ட நீர்நிலைகள்மாசடைவதாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

அதேநேரம், விதிகளை மீறி செயல்படும் சாயப்பட்டறைகளில் சோதனைக்குச்  செல்லும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பெயரளவுக்கு அபராதம் விதித்துவிட்டு, லட்சக்கணக்கில் லஞ்சவேட்டையாடி வருவதாகவும்  குற்றச்சாட்டுகள் கிளம்புகின்றன.இந்த நிலையில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வரை 'கவனித்துக் கொள்ள'வேண்டும் என்று கூறி, சேலத்தைச் சேர்ந்த சாயப்பட்டறை உரிமையாளர் மணிமாறன் என்பவரிடம் 3லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, சேலம் மாவட்ட முன்னாள் சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம்பேரம் பேசிய உரையாடல் சமூக ஊடகங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த மணிமாறன் (43), சாயப்பட்டறைக்குத் தேவையான கெமிக்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவர், தனது நண்பர் பிரகாஷ் என்பவருடன் சேர்ந்து சொந்தமாக சாயப்பட்டறை நடத்த முடிவு செய்தார். இதற்காக, கடந்த 2023ஆம் ஆண்டு சேலம் சீலநாயக்கன்பட்டியில், ஏற்கனவே இயங்கி வந்த பழைய சாயப்பட்டறையை விலைக்கு வாங்கினர். தங்களுடைய சாயப்பட்டறை ஆலையில் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தவும், ஆலைக்கு மின்இணைப்பு கேட்டும் சேலம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தார். இங்குதான்அவருக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் முளைத்தன.

இது தொடர்பாக மணிமாறன் நம்மிடம் விரிவாகப் பேசினார். ''நான் புதிதாக சாயப்பட்டறையை நடத்த அனுமதி கேட்டு, சேலம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செந்தில் விநாயகத்தை அணுகினேன். அவரோ, இது தொடர்பாக சிவக்குமார் என்பவரை பார்க்கும்படி கூறினார். இந்த சிவக்குமார் யார் என்று விசாரித்தபோது, அவர்தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை சாயப்பட்டறை உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் வசூலித்துக் கொடுக்கும் புரோக்கர் என்பதும், அவருடைய கம்ப்யூட்டர் ஐ.டி., மூலம் கோப்புகளை அனுப்பினால் மட்டுமே துறை அதிகாரிகளிடம் உரிமம் பெற முடியும் என்பதும் தெரிய வந்தது. அவரை அணுகியபோது, ஆலைக்கு மின் இணைப்பு கட்டணமாக 1.60 லட்சம் ரூபாய் செலுத்தும்படி கூறினார். இதற்காக என் பங்குதாரர் பிரகாஷ் பெயரில் டி.டி. எடுத்துக் கொடுத்தேன்.

அதன்பிறகு, துறை  விதிகளின்படி சாயப்பட்டறை ஆலையில் சில மாற்றங்களைச் செய்யும்படி கூறினார். அதனால் புதிதாககட்டடத்திற்கு பெயிண்ட் அடித்தது, மராமத்துப் பணிகள் என 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தோம். பின்னர், சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகத்திடம் பேசியபோது, 'எம்' வரை பணம் கொடுக்கணும். 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் சீக்கிரம் அனுமதி கிடைத்து விடும் என்றார். தமிழகசுற்றுச்சூழல் துறை மினிஸ்டர் மெய்யநாதனைத்தான் அவர் 'எம்' என்று சூசகமாக கூறினார். 'எம்'என்றால் மினிஸ்டர் என்பதன் சுருக்கம் என்கிறார்கள். ஏற்கனவே ஆலையை குத்தகை ஒப்பந்தம் எடுத்தது, மராமத்துப் பணிகள் என 80 லட்சம் ரூபாய் வரைசெலவு செய்துவிட்ட நிலையில் சாயப்பட்டறைக்கு அனுமதி தராமல், லஞ்சம் கேட்டு இழுத்தடித்ததால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்விநாயகம், புரோக்கர் சிவக்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை, முதல்வரின் தனிப்பிரிவு, ஆளுநர் ஆகியோருக்கு புகார் அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செந்தில் விநாயகம், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, இணை முதன்மை சுற்றுச்சூழல்பொறியாளராக பதவி உயர்வு பெற்று, கோவைக்கு மாறுதலாகிச் சென்றுவிட்டார். அமைச்சர் பெயரைச்சொல்லி அவர் லஞ்சம் கேட்ட ஆடியோ, புரோக்கர் சிவக்குமார் பேசிய ஆடியோ எல்லாவற்றையும் இணைத்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு மீண்டும் புகார் அனுப்பினேன். அதற்கும் எந்த ரெஸ்பான்சும் இல்லை. புரோக்கர் சிவக்குமாருக்கு தாசநாயக்கன்பட்டியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வீடுஉள்ளது. சேலம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளராக யார் வந்தாலும் அவர்களுக்கு சகலவசதிகளையும் செய்து கொடுத்து, கைக்குள் போட்டுக் கொள்கிறார். அவர்களும் இவரையே வசூல்ஏஜண்டாக வைத்துக் கொள்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் சாயப்பட்டறை ஆலைகள், கல் குவாரிகள், சேகோ ஆலைகளின்உரிமையாளர்களிடம் இருந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செந்தில் விநாயகம்மாதந்தோறும் கோடிக்கணக்கில் லஞ்சமாக வசூலிக்கிறார். இதற்கெல்லாம் சிவக்குமார்தான் வசூல்ஏஜண்ட். சுற்றுச்சூழல் துறை மந்திரியின் மகன் ஏற்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கிறார். அவருக்கு சிவக்குமார் எடுபிடி வேலைகள் செய்து கொடுத்து வந்ததால் மந்திரியிடமும் நெருக்கமாகி விட்டார். உயர் அதிகாரிகள், மந்திரி வரை செல்வாக்கு உள்ளதால் சுற்றுச்சூழல் துறை பொறியாளர் செந்தில்விநாயகத்தின் தூண்டுதலின் பேரில் சிவக்குமார், என் மீது நான் அவரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டுமிரட்டியதாக சேலம் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் ஏப். 30ஆம் தேதி கைது செய்தனர்” என்று கொதித்தார் மணிமாறன்.

Pollution control officer who gives money by saying the name of the minister
செந்தில் விநாயகம்

இந்த புகார் தொடர்பாக சேலம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் சுற்றுச்சூழல் பொறியாளரும், தற்போதைய கோவை மண்டல இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளருமான செந்தில் விநாயகத்திடம் பேசினோம். “இப்போதுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் என் குரலில் பேச முடியும். அதைத்தான் மணிமாறனும் செய்துள்ளார். அவர் தொடங்க உள்ளதாகச் சொல்லப்படும் சாயப்பட்டறைக்கு ஏற்கனவே துறை மூலமாக 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. அதனால் மீண்டும் அனுமதி கொடுக்காமல் இருந்தோம். இதை மனதில் வைத்துக் கொண்டு எங்கள் மீது பொய் புகார் சொல்கிறார். சிவக்குமார் என்பவர் சாயப்பட்டறைகளுக்கு அனுமதி பெற்றுத்தரும் கன்சல்டன்ட் ஆக உள்ளார். மணிமாறனுக்கும் சிவக்குமாருக்கும் ஏதோ பிரச்னை என்றும் கேள்விப்பட்டேன். மற்றபடி வேறு ஒன்றும் தெரியாது” எனபட்டும் படாமலும் சொன்னார் செந்தில் விநாயகம்.

மணிமாறன் மீது போலீசில் புகாரளித்த சிவக்குமாரிடம் கேட்டபோது, “சார்... நான் சாயப்பட்டறைதொடங்குவது, உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து தரும் கன்சல்டன்ட் மட்டுமின்றி, சொந்தமாக சாயப்பட்டறையும் நடத்தி வருகிறேன். நான் விதிகளை மீறி சாயப்பட்டறை நடத்திவருவதாக என் மீது ஆர்டிஐ சட்டத்தின் கீழ் மணிமாறன் அடிக்கடி கேள்வி கேட்டு, அதிகாரிகளுக்குநெருக்கடி கொடுத்து வருகிறார்.இதனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் என்னுடைய பட்டறைக்கு அடிக்கடி சோதனையிடவருவதால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், 25 லட்சம் ரூபாய் பணம்கொடுக்காவிட்டால் மேலும் மேலும் குடைச்சல் கொடுப்பேன் என மணிமாறன் மிரட்டினார். இதனால்தான் அவர் மீது புகாரளித்தேன்” என்றார்.

ஏப். 30ஆம் தேதி காலையில் தனது கெமிக்கல் கடையில் அமர்ந்து இருந்த மணிமாறனை, சேலம் டவுன்இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயதேவி தலைமையிலான போலீசார், காவல்நிலையத்திற்கு அழைத்துவந்துள்ளனர். இரவு 8 மணி வரை காவல்நிலையத்திலேயே அமர வைக்கப்பட்ட அவருக்கு தேநீர்,சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளனர். செல்போன், வாட்ச் ஆகியவற்றை அவரிடம் இருந்து வாங்கிவைத்துக் கொண்ட போலீசார், அவரிடம் எந்த விசாரணையும் நடத்தாமலேயே, கொலை மிரட்டல்,அச்சுறுத்தி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். சேலம்ஜே.எம்.-1 நீதித்துறை நடுவரின் வீட்டில் ஆஜர்படுத்தினர். அதுவரை மணிமாறனுக்கு தன் மீது புகார் அளித்தது யார்? எதற்காக கைது செய்தனர்? என்ற விவரமே சொல்லப்படவில்லை எனத் தெரிகிறது.

Pollution control officer who gives money by saying the name of the minister
சிவக்குமார்

நீதித்துறை நடுவரிடம், சேலம் மாவட்டச் சுற்றுச்சூழல் துறையின் விதிமீறல்கள், பொறியாளர் செந்தில்விநாயகம் மீது விஜிலன்சுக்கு அளித்துள்ள புகார், ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல்கள் குறித்து மணிமாறன் விளக்கம் அளித்துள்ளார். தன் மீது சிவக்குமார், ஏற்கனவே மல்லூர் காவல்நிலையத்திலும் இதேபோன்ற ஒரு புகார் அளித்தபோது, அதில் உண்மைத்தன்மை இல்லை என்று கூறி வழக்குப்பதிவு செய்யவில்லை என்பதையும் கூறியுள்ளார். இதை கவனமாகக் கேட்டுக்கொண்ட நீதித்துறை நடுவர், அவவை பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் ஜெயதேவியிடம் கேட்டபோது, ''சிவக்குமார் அளித்த புகார்குறித்து விசாரித்ததில் மணிமாறன் மிரட்டி இருப்பது தெரிய வந்த பிறகுதான் எப்.ஐ.ஆர் பதிவுசெய்தோம்,'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். மந்திரியின் பெயரைச் சொல்லி பகிரங்கமாக லஞ்ச வேட்டையாடும் பொறியாளர் செந்தில் விநாயகம் போன்றோரால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மட்டுமின்றி, தமிழகமே மாசடைந்து விடும் அபாயம் உள்ளது. இதெல்லாம் அமைச்சருக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லது அவர் பெயர் தவறாகபயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்என்கிறார்கள் சாயப்பட்டறை உரிமையாளர்கள். 

சாயப்பட்டறைக்கு அனுமதி வழங்க, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பெயரைச்  சொல்லி, சேலம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்  விநாயகம், புகார்தாரர் மணிமாறனிடம் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு வாட்ஸ்ஆப் வழியாக பேரம்  பேசிய உரையாடல் விவரம்: 

ad
மணிமாறன் - செந்தில்விநாயகம்

மணிமாறன்: சார் வணக்கம்.

செந்தில்விநாயகம்: வணக்கம். சிவக்குமார் பேசினாப்லயா. 

மணிமாறன்: பேசினார் சார். இன்னிக்கு காலையில உங்களை நேரில் பார்க்கச் சொன்னாருங்க சார்.

செந்தில் விநாயகம்:  நேத்து மீட்டிங்ல எவ்வளவோ போராடிப் பார்த்துட்டேன். எவ்வளவோ சிரத்தை  எடுத்தாரு தெரியுமா? எப்படியாவது உங்களுக்கு கிளியரன்ஸ் வாங்கிடணும்னு பயங்கரமா இது  பண்ணினாரு. பயங்கர பிரஷ்ஷர் எனக்கு. கடைசில என்னாச்சுனா... இந்த லீஸ் அக்ரிமென்ட்  போட்டுருக்கீங்கள்ல. அது ஜனவரியோட முடியுது இல்லையா. இன்னும் ரெண்டு வருஷத்துக்கு போட்டு  கொண்டு வாங்க. அடுத்த வாரம் மீட்டிங்ல வாங்கித் தரேன்.  
 
மணிமாறன்: அடுத்த வாரம் ஆகிடுமா சார்...  
 
செந்தில் விநாயகம்: ஆமா.

மணிமாறன்: ஆங்... சரிங்க சார்.

செந்தில் விநாயகம்: நான் வாங்கித் தர்றேன்ங்க. நான் வாங்கித் தரேன் விடுங்க.  
 
மணிமாறன்: சரிங்க சார்... இப்போ என்ன பண்ணட்டும் உங்களுக்கு... அந்த அக்ரிமென்ட்ட மட்டும் மாத்தணுமா?
 
செந்தில் விநாயகம்: அக்ரிமென்ட் மட்டும் போட்டுட்டு என்கிட்ட கொடுங்க. மீதிய நான் பார்த்துக்கறேன்.  
 
மணிமாறன்: மணி: சரிங்க சார். இன்னிக்கு மாத்திடறேன்.
 
செந்தில் விநாயகம்: சிவக்குமாரே வாங்கித் தர்றேன்னு சொன்னாரு. ரெண்டு வருஷம் வாங்கிக் கொடுத்தா போதுமா சார்னு கேட்டாப்ல. தாராளமா போதும். அப்படியே கொடுங்கனு சொல்லிட்டேன்.  
 
மணிமாறன்: ஏற்கனவே அப்படிதான் அக்ரிமெண்ட் போட்டிருந்தேன் சார். எப்படி மாறுச்சுனு தெரியல.  
 
செந்தில் விநாயகம்: பதினோரு மாசம்தான் அக்ரிமென்ட் போடுவாங்க. நீங்க ரெண்டு வருஷத்துக்கோ அல்லது மறுபடி பதினோரு மாசத்துக்கோ போடுங்க. அப்படி அக்ரிமென்ட் போட்டால்தான் கன்சென்ட் ரிலீஸ் ஆகும். ரிலீஸ் ஆகிடுச்சுனா அப்புறம் நம்ம கன்ட்ரோல்தான். நான் பார்த்துக்கறேன் விடுங்க.
 
மணிமாறன்: சரிங்க சார். இது நெக்ஸ்ட் வீக்ல ஆகிடும்ல.

செந்தில் விநாயகம்: ஆமாம். அடுத்த வாரம் ஆகிடும். அதான் வாராவாரம் மீட்டிங் வைக்கிறார்ல. ஒண்ணும் பிரச்னை இல்ல. சிவக்குமாரே உங்களுக்கு வாங்கிக் கொடுத்துடறேனு சொன்னாரு. அவர்தான்ங்க உங்களுக்காக  உக்காந்து உக்காந்து பிரயாசைப் படுறாரு. ஹாஹாஹாஹா.... ஜே.சி., ஆபீசுல சர்புதீன்னு ஒரு கூமுட்ட  உட்கார்ந்து இருக்கான். ஜே.சி., கூட சரின்னு சொல்றாரு. ஆனா அவன்தான் கெடுத்து விடுறான்.  அக்ரிமென்ட் வாங்கிட்டு வரட்டும். நாம முடிச்சு கொடுத்துடலாம்னு சொல்லிட்டாங்க.  
 
மணிமாறன்: சரிங்க சார். நான் அக்ரிமென்ட் போட்டுக் கொண்டு வரேன். நான் நேரில் வரணுமா?  உங்கள பார்க்கணுமா சார்?
 
செந்தில் விநாயகம்: என்னை பார்க்கணும்னு அவசியம் இல்ல. சிவக்குமார்கிட்ட கொடுத்து விட்டுருங்க.   
 
மணிமாறன்: இந்த அமவுண்ட்டயும் அவர்கிட்டயே பேசிறட்டுமா?
 
செந்தில் விநாயகம்: அவர்கிட்டயே பேசிடுங்க.  
 
மணிமாறன்: ஏதாவது குறைக்க வாய்ப்பு இருக்கா? கொஞ்சம் குறைச்சு பண்ணிக் கொடுங்களேன்.   
 
செந்தில் விநாயகம்: இந்த மாதிரி நச்சுக்காகத்தாங்க நான் கேக்கறது. வேற ஒண்ணும் இல்லீங்க. வாயை அடைக்கணும்ல.  
 
மணிமாறன்: மூன்று லட்சம்கிறது அதிகமாக இருக்கு. கொஞ்சம் குறைச்சுக்குங்க சார்.   
 
செந்தில் விநாயகம்: அங்க 'எம்' கிட்ட பேசணும்ல. எல்லாத்தையும் மேனேஜ் பண்றேன்ல. கொஞ்சம்  என்னை அட்ஜஸ் பண்ணிக்குங்க. அவ்வளவுதான். வேற வழி இல்ல. ஹாஹாஹாஹா... 

மணிமாறன்: ரொம்ப அதிகமாக இருக்கு. எனக்கோசரம்....
 
செந்தில் விநாயகம்: நான் பண்ணித்தர்றேன். விடுங்க.  
 
மணிமாறன்: சரி சார்... ஓகே...” இவ்வாறு அந்த ஆடியோ பதிவில் பேசப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்