Pollution Control Board published the air quality index

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருவிழாவின் முதல்நாள் போகி ஆகும். கிரிகோரியன் நாள்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 அல்லது 14 ஆம் நாளில் கொண்டாடப்படும். அந்த வகையில் தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் போகி கொண்டாடப்படுகிறது.

Advertisment

இதனையொட்டி சென்னையில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமாக மேள தாளங்களை முழங்கிக் கொண்டு பழைய பொருட்களைத் தீயிட்டு வருகின்றனர். இதனிடையே டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் சில இடங்களில் இந்த உத்தரவையும் மீறி பல்வேறு பொருட்கள் எரிக்கப்பட்டன. இதனால் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது.

Advertisment

அதே சமயம் கடும் புகை மூட்டம் காரணமாகச் சென்னையில் 50 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னையிலிருந்து அந்தமான், புனே, மும்பை, டெல்லி, தூத்துக்குடி, ஐதராபாத், மதுரை செல்ல வேண்டிய விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. மொத்தம் 21 விமானங்கள் புறப்படுவதிலும், 21 விமானங்கள் சென்னைக்கு வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புகை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், சென்னையில் தரையிறங்கவிருந்த சிங்கப்பூர், லண்டன், இலங்கை, டெல்லி ஆகிய இடங்களிலிருந்து வந்த விமானங்கள் புகை மூட்டம் காரணமாக ஐதராபாத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு மோசமான அளவிற்கு அதாவது 270 என்ற அளவில் பாதிவாகியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நேற்று (13.01.2024) காலை 8 மணி முதல் இன்று (14.01.2024) காலை 8 மணி வரையிலான 24 மணி நேர காற்றின் தரக்குறியீட்டு அளவீட்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணாநகரில் குறைந்தபட்ச மிதமான அளவில் அதவாது 131 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய ஆண்டு மதிப்பை ஒப்பிடும் போது காற்றின் தரக்குறியீட்டு மதிப்பு ஒரே மாதிரியாக உள்ளது எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisment