Advertisment

சத்துணவு ஆயாக்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் பணி; வாக்குப்பதிவு பாதிக்கும் அபாயம்!

Polling Officer Job for Workers tn assembly election

Advertisment

வாக்குச்சாவடி மையங்களில்உள்ள வாக்குச்சாவடி அலுவலர் நிலை - 2 என்ற முக்கியத்துவம் வாய்ந்த பணி சத்துணவுப் ஆயாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு விகிதம் குறையும் அபாயம் உள்ளதாக அதிருப்தி கிளம்பியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏப். 4ஆம் தேதி மாலை 07.00 மணிக்குப் பரப்புரை முடிவடைகிறது. வரும் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்கனவே இரண்டு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயிற்சியில் கலந்துகொள்ளாதவர்களுக்கு சனிக்கிழமை (ஏப். 3) பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் - 1, 2, 3 என குறைந்தபட்சம் நான்கு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர் - 2 என்ற பொறுப்பில், வழக்கத்திற்கு மாறாக இந்தமுறை 600- க்கும் மேற்பட்ட சத்துணவு மைய ஆயாக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சத்துணவு ஆயாக்கள் 5ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள் என்பதால், வாக்குப்பதிவின்போது தனி பதிவேட்டில் வாக்காளர் பெயர்களை எழுதி, அதில் கையெழுத்து பெறுவதில் நடைமுறைச் சிக்கல் ஏற்படும். இதனால் வாக்குப்பதிவு விகிதம் குறையும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

Advertisment

இது தொடர்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நம்மிடம் பேசினர். “தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களுக்குத்தான் பணி ஒதுக்கப்படுகிறது. இதில் தலைமை வாக்குச்சாவடி அலுவலருக்கு அடுத்து, வாக்குச்சாவடி அலுவலர் - 2 என்ற நிலையில் நியமிக்கப்படும் ஊழியருக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது.

அதாவது, வாக்குச்சாவடி அலுவலர் - 2 என்பவர், ஒரு வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளரின் பெயரைப் பதிவேட்டில் கைப்பட எழுதி, அதற்கு நேராக வாக்காளரிடம் கையெழுத்து அல்லது விரல் ரேகை பெற வேண்டும். அடுத்து, வாக்காளரின் இடக்கை ஆள்காட்டி விரல் நகத்தை துணியால் துடைத்துவிட்டு அதில் அழியாத மை வைத்துவிட வேண்டும்.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பணிகளில், முதன்முறையாக சத்துணவு மைய ஆயாக்களை நியமித்துள்ளனர். அவர்களில் 99 சதவீதம் பேர் 5ஆம் வகுப்பைக் கூட தாண்டாதவர்கள். அவர்களின் பெயரையே எழுத்துக்கூட்டித்தான் எழுதும் நிலையில் உள்ளனர்.

அவர்கள், வாக்காளரின் பெயர்களை எழுத்துக்கூட்டி எழுதவே அதிக நேரம் தேவைப்படும். இதனால் வாக்குப்பதிவுக்கு தாமதம் ஆவதோடு, வாக்குப்பதிவு விகிதமும் இந்தமுறை கணிசமாக குறையவும் வாய்ப்புள்ளது. இதில் தேர்தல் ஆணையத்திற்கு உள்நோக்கம் இருக்கிறதா எனத் தெரியாது. ஆனால், இந்தப் புதிய நடைமுறையைத் தவிர்ப்பது நல்லது. வேண்டுமானால் சத்துணவுஆயாக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவுக்கான பொத்தானை இயக்கும் வாக்குச்சாவடி அலுவலர் - 3 பணி வழங்கலாம்.

இது மட்டுமின்றி, வாக்குச்சாவடி பணி ஒதுக்கீட்டில் இன்னும் சில குறைபாடுகளும் உள்ளன. தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் பலருக்கு, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதுதான் முதல் தேர்தல் பணி.

எடுத்த எடுப்பிலேயே அவர்களுக்கு மிகுந்த பொறுப்புள்ள தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது ஆபத்தானது. வாக்குச்சாவடிகளில் ஏதேனும் முறைகேடு நடந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இதுமட்டுமின்றி, 2,800 ரூபாய் தர ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரியர்கள்தலைமை வாக்குச்சாவடி அலுவலர் பணியிலும்;4,600 தர ஊதியம் பெறும் அனுபவம் வாய்ந்த பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் - 1, 2, 3 பணிகளில் நியமிக்கப்பட்டுள்ள அபத்தங்களும் நடந்துள்ளன.

காலங்காலமாக தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. ஆனாலும், வாக்குச்சாவடிகளில் சரியான பணியாளர்களை நியமிப்பதில் இப்போது வரை குளறுபடிகள் நிலவுவது வேடிக்கையாக இருக்கிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால், கம்ப்யூட்டரில் பதிவானதில் குளறுபடி நடந்துள்ளதாக அபத்தமான பதிலைச் சொல்கிறார்கள்,'' என்கிறார்கள் ஆசிரியர்கள்.

இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராமனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ''வாக்குச்சாவடி அலுவலர் - 2 நியமனம் குறித்து எங்கள் கவனத்துக்கும் வந்துள்ளது. அவர்களுக்குப் போதுமான அளவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாளையும் (ஏப். 3) பயிற்சி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு தொகுதியிலும், நெருக்கடி நிலையை சமாளிக்க ரிசர்வ் நிலையில் வாக்குச்சாவடி ஊழியர்களும் உள்ளனர். பதிவேடு பராமரிப்பில் ஏதேனும் சிக்கல் வந்தால் மாற்றுப்பணியாளர்கள் மூலம் அப்பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

employees poling booth tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe