Skip to main content

’கத்தியை நல்ல விதமாகவும் பயன்படுத்தலாம் கெட்ட விதமாகவும் பயன்படுத்தலாம்’- பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் கருத்துகள்

Published on 14/03/2019 | Edited on 14/03/2019
l

 

பொள்ளாச்சி பகுதியில் காதல் என்ற பெயரில் நம்பி வந்த பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, காமவெறி பிடித்த நண்பர்களுக்கு கட்டாய படுத்தி பங்கு வைத்த கொடூரம் குலை நடுங்க செய்கிறது. பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றொர்களின் மனம் பதை பதைக்கும் இந்த கொடூரம் குறித்தும், இவற்றை தடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் சமூகத்தின் பல தளங்களிலும் பயணிக்கும் பெண்களிடம் கருத்துகளை கேட்டோம்.

 

விருத்தாசலம் மகளிர் சங்க தலைவி, எழுத்தாளர் கலைச்செல்வி :

 

k

 

“ கத்தியை நல்ல விதமாகவும் பயன்படுத்தலாம் கெட்ட விதமாகவும் பயன்படுத்தலாம். அது போல தான் டிவி, சினிமா, இணையதளம் போன்றவைகள். நல்ல விதமாக மட்டுமே பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை. அவைகளில் வரும் கெட்டவைகளுக்கு அடிமையாகி விட்டால் அந்தப் பெண்களின் வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும். எந்த பெற்றோரும் தமது பிள்ளைகள் சீரழிவதை அனுமதிக்க மாட்டார்கள்.

 

பெற்றோர்களை ஏமாற்றுவதாக நினைத்து தமது வாழ்க்கையும் ஏமாற்றி சீரழித்துக் கொள்கிறார்கள் பிள்ளைகள்.  இது ஆண், பெண் இருதரப்பு பிள்ளைகளுக்கும் பொருந்தும். பெண்கள் வீட்டைத் தாண்டி அதிக நேரம் இருப்பது படிக்கின்ற இடங்களிலும், வேலை செய்கின்ற இடங்களிலும் தான். எனவே பள்ளி கல்லூரிகளில் ஒவ்வொரு நாளும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வையும் ஒரு பாடமாக வகுப்பு எடுக்க வேண்டும். அதுபோல்  இதுபோன்ற கொடூரமான, மோசமான சம்பவங்கள் நடைபெறும் போது மட்டும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் அதன் பிறகு அது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை. எனவே அரசு, பெற்றோர், சமூக இயக்கங்கள், காவல்துறை என கூட்டாக இணைந்து பிள்ளைகளிடம் பாதுகாப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

 

கடலூர் மாவட்டம்  தர்மநல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயஸ்ரீ :  

 

j

 

 “ இதுபோன்ற  கொடூர சம்பவங்கள்  பெண்களின்  பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. பெண்களுக்கு சுய பாதுகாப்பு, விழிப்புணர்வு அவசியம்.  அவற்றை குடும்பமும், உருவாக்க வேண்டும். இந்த  கொடூர சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சமின்றி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதேபோல் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்களை பற்றி ‘அவர் அந்தக் கட்சியை சேர்ந்தவர், இவர் இந்த கட்சியை சேர்ந்தவர்’ என்றெல்லாம் மாறி மாறி விமர்சனங்கள் வருகிறது. இதில் அரசியல் கட்சிகள் தலையீட்டால் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் தைரியமாக வெளியே வந்து உண்மையை சொல்வதற்கு கூட தயங்குவார்கள். அதனால் பல குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.  எனவே  உண்மையான பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் பாதிப்புகளை சொல்வதற்கும், குற்றவாளிகள் தப்பி விடாமல் தண்டனை பெறுவதற்கும் நேர்மையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.  வழக்கை நீண்ட காலம் நடத்துவது,  பின்னர் தண்டனையை குறைத்து வெளியே விடுவது போன்றவைகளால் தான் குற்றங்கள் மேலும் மேலும் நடந்து கொண்டே இருக்கின்றன.  எனவே உடனடியாக நீதி விசாரணை நடத்தி, கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

 

 

புதுச்சேரி விழிப்புணர்வு சொற்பொழிவாளர் பிரமிளா தமிழ்வாணன்:

p

 

இளைஞர்களில் 90% பேர் நல்லவர்களாவும், 10% கெட்டவர்களாகவும் உள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பெண் தோழிகள் இயற்கை உபாதைக்காக செல்லும் போது பாதுகாப்பாக அழைத்து சென்று தூரத்தில் நின்றவர்களும் இளைஞர்கள்தான். எனவே 10& கெட்டவர்களை நம்பிதான் அதிகாமான பெண் பிள்ளைகள் தமது எதிர்காலத்தை கெடுத்து கொள்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளை எவ்வளவு பாசமாக பார்த்து பார்த்து வளர்க்கிறார்கள். அதை இந்தப் பெண் பிள்ளைகள் மறந்துவிடுகிறார்கள்.  அதேபோல் பெண் பிள்ளைகளிடம் பாசம் காட்டி வளர்க்கின்ற அதே சமயத்தில் அவர்களை கண்காணித்தும் வளர்க்க வேண்டும்.

 

அந்தக் காலத்தில் பெண்கள் பெற்றோர்களின் கவனிப்பில் கண்காணிப்பில் இருந்தார்கள்.  ஆனால் இப்போது பிள்ளைகளை வளர்க்கிற வேலையை ஆசிரியர்களிடமும், தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்களிடமும், விட்டு விட்டு குடும்பத்தலைவிகள் சீரியல்களில் மூழ்கி விடுகிறார்கள்.  வீட்டிற்குள்ளும்,  வீட்டுக்கு வெளியிலும் பெண் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிப்பதில்லை.  அதனால் தான் பெண்கள் வெளியில் கிடைக்கும் போலியான அன்பை நம்பி ஏமாந்து விடுகிறார்கள். பழகிய மனிதர்களையே முழுமையாக நம்ப முடியாத இக்காலத்தில் முகநூல்களில் வரும் பேக் ஐடிகளை நம்பி ஏமாந்து தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள். பொதுவெளியில் பழகியவர்களை நம்பியே செல்ல முடியாத இக்காலத்தில் முகநூல் பழக்கத்தை மட்டுமே நம்பி நான்கு சுவற்றுக்குள் எப்படி செல்கிறார்கள். இதேபோல் பெண் பிள்ளைகளுக்கு சொல்லுகிற அறிவுரையை குடும்பமும், சமூகமும் ஆண் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர வேண்டும்.  

 

 

புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர்கள் செயலாளர் கவிஞர் உமா அமர்நாத்:

 

u

 

“அந்தப் பெண்களின் அழுகுரல்கள் ஈரக் குலையை அறுப்பது போல் நெஞ்சைப் பிளக்கிறது.  தனிப்பட்ட பாலியல் பலாத்காரம் என்பது வேறு, இது போன்ற கூட்டு பாலியல் வன்புணர்ச்சி என்பது வேறு. கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபடுபவர்கள் மனிதர்கள் தானா..? என்கிற கேள்வி எழுகிறது.

 

மனிதர்கள் மிருகமாக மாறிக் கொண்டே வருகிறார்களோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. இதுபோன்ற விவகாரங்களில் பொதுவாக பெண் பிள்ளைகளை மட்டுமே குற்றம் சாட்டும் போக்கு உள்ளது.  குறிப்பாக பெண் பிள்ளைகள் உடுத்தும் ஆடைகள் குறித்த பார்வை தவறானதாக இருக்கிறது. பெல்ட்டால் அடித்து துன்புறுத்தி ஆடையை அவிழ்க்க சொல்லும் போது எந்த ஆடை அணிந்து இருந்தால் என்ன..? மேலும் பெண் உடலை வைத்து பெண்களை மீண்டும் அடுப்படிக்கு செல்ல அறிவுறுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. அதுவும் தவறானது. ஆண் பிள்ளைகளுக்கும் ஆண் பெண் உடல் குறித்து புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

 

 பெண்களின் உறுப்புகளை, ஆண்களின் உறுப்புகளை வெறும் சதைதான் என்கிற உண்மையை இருபால் பிள்ளைகளிடம் புரிய வைக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள அம்மா, தங்கை அவர்களைப் போல தான் மற்ற பெண்களின் உடல்களும் என்பதையும்,  திருமணத்திற்கு பிறகு ஒவ்வொருவருக்கும் சேர்கிற இணை தான் சரியானதாக இருக்கும் என்பதையும் முதலில் ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதேபோல் பெண்கள் உடலை மையப்படுத்தி ஏற்படுத்தப்படும் அச்ச உணர்வை போக்குகின்ற வகையில் பெண்ணுடலை,  பெண்களின் அந்தரங்கங்களை வைத்து ஒருவன் மிரட்டும் போது.. ‘விட்டுட்டு போ… என்னை அசிங்கப் படுத்துவதாக நினைத்தால் உன்னை சமூகம் காரித்துப்பும், உன் குடும்பத்தை ஊர் காரித்துப்பும். உன்னை யாரும் திருமணம் செய்யக் கூட முன்வர மாட்டாள்..’ என தயக்கமின்றி எதிர்வினையாற்ற கற்றுத்தர வேண்டும். மேலும் ஊடகங்களும்,  சமூகமும் பெண்களின் மீது குற்றம்  சொல்லும் போக்கில் இருந்து மாற வேண்டும்.

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கணவருக்கு சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 The court action decision for Husband jailed for sending video to wife

கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 36 வயது மிக்க இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சிறிது நாளிலேயே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் அந்த பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால், கணவர் விவாகரத்து தரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் மனமுடைந்த அந்த பெண் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே, அந்த பெண் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவரது கணவர் மின்னஞ்சல் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி, ஆபாசமான குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார். இதில் கோபமடைந்த அந்த பெண், இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் வசித்து வரும் தனது சகோதரரிடம் கூறியுள்ளார். அதன் பேரில், அந்த பெண்ணின் சகோதரர் பெங்களூர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வந்த பெண், கணவர் அனுப்பிய ஆபாச வீடியோக்கள் தொடர்பானது குறித்து தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று (19-03-24) நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது. அதில், விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தியது உறுதியானதால், தனியார் நிறுவன ஊழியருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது.