பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட கயவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொள்ளாச்சி பகுதியில் வக்கிரத்தில் வார்த்தெடுக்கப்பட்ட கும்பலால் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், அதைத் தொடர்ந்து மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் இரக்கம் காட்டப்பட தகுதியற்றவர்கள்; தண்டிக்கப்படுவதற்கே தகுதியானவர்கள்.

Advertisment

anbumani ramadoss

பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவன் தலைமையிலான கும்பல் தான் கற்பனையில் கூட சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாலியல் வக்கிரங்களையும், கொடூரங்களையும் அரங்கேற்றி உள்ளது. முகநூல் மூலம் தோழிகள் ஆனவர்கள், நண்பர்களின் உறவினர்கள், வலிமையான பின்னணி இல்லாத எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை இலக்கு வைத்து பழகி, காதல் ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும், அதை படம் பிடித்து வைத்துக் கொண்டு அதையே காட்டி பணம் பறித்தல், மீண்டும், மீண்டும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்குதல் உள்ளிட்ட குற்றங்களை இந்த கும்பல் அரங்கேற்றியிருப்பதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

Advertisment

சகோதரிகளாக பார்க்க வேண்டிய பெண்களை மிருகங்களாக மாறி சிதைத்த இவர்களிடம் கருணை காட்டக்கூடாது. இதற்குக் காரணமாக திருநாவுக்கரசு என்பவன் உள்ளிட்ட நால்வரை காவல்துறை கைது செய்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமே இந்தக் கொடூரங்களை அரங்கேற்றியிருக்க முடியாது. இதயத்தை பதைபதைக்கச் செய்யும் இந்த பாலியல் குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், கடுமையான தண்டனையையும் பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.