ADVERTISEMENT

'பஞ்சாமிர்தத்தில் அரசியல்' - குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கோவில் நிர்வாகம்

12:25 PM Mar 12, 2024 | kalaimohan

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் காலாவதியான பஞ்சாமிர்தத்தை கோவில் நிர்வாகம் விற்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயிலில் தொடர்ந்து சர்ச்சையான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கோவிலைச் சுற்றியுள்ள சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகற்றப்பட்டதால் போராட்டம், நீதிமன்ற வழக்குகள் என அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலாவதியான பஞ்சாமிர்தம், கோவில் நிர்வாகத்தாலே விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் கோவில் மலை மீதுள்ள விற்பனை நிலையங்களில் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான லாரியில் 30க்கும் மேற்பட்ட கேன்களில் அடைத்து வைக்கப்பட்ட பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதனை பார்த்த ஒரு தரப்பினர் லாரியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்படுகிறதா? அல்லது வேறு இடங்களுக்கு பஞ்சாமிர்தம் கடத்தப்படுகிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பினர். உடனடியாக அங்கு வந்த அடிவாரம் காவல் நிலைய போலீசார், லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், 'விழாக் காலங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அதிகப்படியான பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் மீதமான காலாவதியான பஞ்சாமிர்தங்களை பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கக் கூடாது என்பதால் பெரிய கேன்களில் நிரப்பி அதை கோசாலைகளுக்கு எடுத்துச் சென்று அழிப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் இதை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற சிலர், குறிப்பாக ஆக்கிரமிப்பு காரணத்தால் அகற்றப்பட்டவர்கள் கோவில் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT