Skip to main content

'பஞ்சாமிர்தத்தில் அரசியல்' - குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கோவில் நிர்வாகம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 'Politics in Panjamirtham'-Temple administration responds to allegation

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் காலாவதியான பஞ்சாமிர்தத்தை கோவில் நிர்வாகம் விற்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயிலில் தொடர்ந்து சர்ச்சையான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கோவிலைச் சுற்றியுள்ள சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகற்றப்பட்டதால் போராட்டம், நீதிமன்ற வழக்குகள் என அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலாவதியான பஞ்சாமிர்தம், கோவில் நிர்வாகத்தாலே விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் கோவில் மலை மீதுள்ள விற்பனை நிலையங்களில் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான லாரியில் 30க்கும் மேற்பட்ட  கேன்களில் அடைத்து வைக்கப்பட்ட பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதனை பார்த்த ஒரு தரப்பினர் லாரியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்படுகிறதா? அல்லது வேறு இடங்களுக்கு பஞ்சாமிர்தம் கடத்தப்படுகிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பினர். உடனடியாக அங்கு வந்த அடிவாரம் காவல் நிலைய போலீசார், லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், 'விழாக் காலங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அதிகப்படியான பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் மீதமான காலாவதியான பஞ்சாமிர்தங்களை பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கக் கூடாது என்பதால் பெரிய கேன்களில் நிரப்பி அதை கோசாலைகளுக்கு எடுத்துச் சென்று அழிப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் இதை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற சிலர், குறிப்பாக ஆக்கிரமிப்பு காரணத்தால் அகற்றப்பட்டவர்கள் கோவில் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.