“மாணவர்கள் பிரச்சனைகளில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை”- மாணவி மனு தாக்கல்! 

publive-image

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாஜகவின் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழ்நாடு பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதாக பாஜக தரப்பில் வாதிடப்பட்டது. தமிழ்நாடு அரசு தரப்பில், தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை 5க்கு தள்ளிவைத்தனர். இந்நிலையில், பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி நந்தினி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாணவர்கள் பிரச்சனைகளில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை எனவும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் ஆய்வு அறிக்கைகளை அரசிடமே அளிக்க உள்ளதால் இதில் யாருடைய உரிமைகளும் பாதிக்கப்படப் போவதில்லை எனவும் தெரித்துள்ளார்.

மேலும், அரசியல் உள்நோக்கத்தோடு பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்க கோரி மூத்த வழக்கறிஞர் வில்சன் சார்பில் முறையீடு செய்யபட்டது. முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் மனுவை வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தனர்.

case Chennai highcourt
இதையும் படியுங்கள்
Subscribe